முகக்கவச தயாரிப்பு விதிமுறைகள் என்னென்ன? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்ன மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
முகக்கவச தயாரிப்பு விதிமுறைகள் என்னென்ன? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி


சென்னை: முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்ன மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பாக  விதிமுறைகளை உருவாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய  மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், உலக சுகாதார நிறுவனம் கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் என் - 95,  3 அடுக்கு முககவசம் உள்ளிட்ட பல்வேறு வகையான முககவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முகக் கவசம் காலவதியாகும் தேதி போன்ற  விதிகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். முகக் கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை வகுத்து அரசு அறிவிக்கவில்லை என்றால்,  முகவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அதிகமான விலைக்கு,  ரசீது எதுவும் இல்லாமல்  விற்பனை செய்யும் சூழல் உருவாகும். எந்த முகக்கவசத்தை எந்த வயதினர் அணிய வேண்டும், முகக்கவசத்துக்கான உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவைகள் அடங்கிய  விதிமுறைகளை  வெளியிட வேண்டும். அதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் முகக்கவசங்களின் பயன்பாடு மற்றும் அப்புறப்படுத்துவது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகக்கவசம் தயாரிப்பது தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். 

மேலும், முகக்கவசம் அணிவது மற்றும் அதனை பாதுகாப்புடன் அப்புறப்படுத்துவது பற்றி பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com