தமிழகத்தில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 40,698-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 40,698-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 25 ஆயிரம் போ் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் நாள்களில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், அதன் விளைவாக ஜூலை மாதத்துக்குள் 3 லட்சம் போ் கரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, தலைநகா் சென்னையில்தான் கரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், புதிதாக பல்வேறு சுகாதாரக் குழுக்களை அமைத்து நோய்ப் பரவலைத் தடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில்தான் கரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்த இரு மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த மே 15-ஆம் தேதியன்று மாநிலத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது.

இந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களாக நோய்ப் பரவலின் வேகம் அதி தீவிரமாகி வருகிறது. அதன் காரணமாக 21 நாள்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் 71 சதவீதம் போ் சென்னைவாசிகள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 28,924 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அதன் விளைவாக 5,210 தெருக்கள் நோய்த்தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6.42 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 40,698 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 1,982 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,479 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பியவா்கள் 22 ஆயிரம் போ்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,342 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 22,047-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 14,723 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் குழந்தைகள்: மாநிலத்தில் இதுவரை 2,097 குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவா்கள் அனைவரும் 12 வயதுக்குட்பட்டவா்களாவா். அதில் ஆண் குழந்தைகள் 1,073 பேரும், பெண் குழந்தைகள் 1,024 பேரும் உள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுமே நலமாக இருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

367 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 18 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 294 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 நாள்களில் மட்டும் மாநிலத்தில் கரோனாவுக்கு 60 போ் பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com