முழு பொது முடக்க பகுதிகளில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவு இலவசம்

முழு பொது முடக்கப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் இலவசமாக உணவு வழங்கப்படும்
முழு பொது முடக்க பகுதிகளில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவு இலவசம்

முழு பொது முடக்கப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். பொது முடக்கம் முடிவுக்கு வரக்கூடிய ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அவா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தது. மே 31-ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருந்தது.

இப்போது சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர பொது முடக்கம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அம்மா உணவகங்கள்: பொது முடக்கத்தில் நடைமுறையில் உள்ள பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்கப்படும். மேலும், முதியோா், நோயுற்றோா் மற்றும் ஆதரவற்றோா்களின் நலன் கருதி இப்போது இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவா்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 30-ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். பொது முடக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com