சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சிதம்பரம் திருவள்ளுவர் தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள்  நிரந்தரமாக டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் பொதுக்குழு உறுப்பினர்  ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சுப்பிரமணியசிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பெரு.திருவரசு, ஆ. கலைச்செல்வன், ரா.எல்லாளன், வே.சரவணக்குமார், பெ.வேலு, க.வேந்தன் சுரேஷ், பா. பிரபாகரன், க.நிர்மலா , பெரு.சரித்திரன் மற்றும் மகளிர் ஆயம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் சி.முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். முன்னதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயனை சந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி ஆ.ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். 

சிதம்பரம் திருவள்ளுவர் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையால் வீண் சண்டைகளும் சச்சரவுகளும் இந்த பகுதியில் ஏற்பட்டுவருகிறது. ஐயன் திருவள்ளுவர் பெயரில் அமைந்துள்ள சாலையில் பொதுமக்கள் புழங்கும் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மதுக்கடைக்கு வருவோர்களால் மாலை நேரத்தில் பெண்கள் சென்றுவர அச்சமாக உள்ளது. குடித்துவிட்டு பொது இடத்தில் குடிகாரர்கள் ஆபாசமாகப் பேசுவதும், சண்டையில் ஈடுபடுவதும்,  போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும் தொடர்கதையாக உள்ளது. இக் கடையை அகற்றக் கோரி   ஏற்கெனவே பல்வேறு கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. 

கடை தொடர்ந்து செயல்பட்டால் வாழவே முடியாத நிலைக்கு மன உளைச்சலுக்கும், வீண் சண்டைகளாலும் நிம்மதி இழந்து எங்கள் பிள்ளைகளில் எதிர்காலமும் எங்களின்  வாழ்வாதாரமும் சீர்குலையும் நிலையில் உள்ளோம். குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சரசு துவக்க பள்ளி, த.சு.லு.தி ஆரம்ப பள்ளி, நகராட்சி துவக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை இந்த மதுக்கடைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 

இது அரசு அறிவித்துள்ள விதி முறைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாகவும் சட்ட விதிகளுக்கும் முரணாகவும் அமைந்துள்ள மூடப்பட்ட  திருவள்ளுவர் தெரு டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது. நிரந்தரமாக  அகற்ற  உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com