நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்னா

மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து அபராத வட்டி வசூலிக்கும் தனியார் நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்னா

மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து அபராத வட்டி வசூலிக்கும் தனியார் நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பெண்கள் தனியார் நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து சுயஉதவிக்குழுக்கள் மூலமாகக் கடனுதவி பெற்று தையல் தொழில், பெட்டிக்கடை, இஸ்திரி கடை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் போதிய வேலை இல்லாததால் நுண் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கு மாதத்தவணைத் தொகைகளை சரிவரச் செலுத்த முடியவில்லை. 

இந்த நிலையில் நுண் நிதி நிறுவனங்களை மாதத்தவணைகளை அபராதத்துடன் செலுத்துமாறு செல்லிடப்பேசி மூலமாக குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். மேலும், ஒரு சில நிறுவனங்கள் கடன் வாங்கிய பெண்களின் வீட்டுக்கே வந்து மாதத்தவணையை செலுத்தக்கோரி மிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே, வேலை இல்லாததால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாங்கிய கடன்களை ரத்து செய்யக்கோரி

தாராபுரம், நஞ்சியம்பாளையம், தென்தாரை, குளத்துப்பாளையம், பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். 

மேலும், அபராத வட்டி வசூலிக்கும் நுண் நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாரிடமும் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்தனர். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com