பொதுமுடக்கத்திலும் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்; 18 ஆண்டுகளாகத் தொடரும் சமூகப் பணி!

கரோனா பொதுமுடக்க காலத்திலும், ஆதரவின்றி தெருவில் உணவின்றித் தவிக்கும் விலங்குகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 
தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்
தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

கரோனா பொதுமுடக்க காலத்திலும், ஆதரவின்றி தெருவில் உணவின்றித் தவிக்கும் விலங்குகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 

கடந்த 18 வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் இந்த தன்னார்வலர்கள், நூற்றுக்கணக்கான விலங்குகளுக்கு நாள் ஒன்றுக்கு 25 கிலோ வரையிலான உணவு அளித்து வருகின்றனர். 

பைரவா விலங்கு நல அறக்கட்டளையின் நிறுவனர் நிஷா சிங் இதுகுறித்து கூறுகையில், 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்று தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு கடந்த 18 வருடமாக நாங்கள் உணவளித்து வருகிறோம். தினமும் 25 கிலோ வரையிலான அரிசி சாதத்தை சமைத்து இருசக்கர வாகனத்தில் சென்று தெருவில் உள்ள நாய், பூனை போன்ற  விலங்குகளுக்கு உணவளித்து வருகிறோம். விலங்குகளை எளிமையாக கையாளுவதற்கான படிப்பையும் முடித்துள்ளோம். மேலும், காயமடைந்த நாய்கள் மற்றும் பூனைகளை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகின்றோம். அவை குணம் அடைந்தவுடன் அவற்றை தத்துக் கொடுக்க முயற்சி செய்கிறோம். 

இதனை விரிவுபடுத்தும் பொருட்டு, 'பைரவா விலங்கு நல அறக்கட்டளையை' நிறுவி பல தன்னார்வலர்கள் மூலமாக எங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தப் பயணத்தில் என்னுடன் இன்னும் நிறைய பெண்கள் உள்ளனர். அவர்களில் திருமதி. பிரபா வேணுகோபால் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர்களது பகுதிகளில் சுற்றி திரியும் நாய், பூனைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

தற்போது எங்கள் அறக்கட்டளையின் சார்பில் புளியந்தோப்பு நாய்கள் அறுவை சிகிச்சை மற்றும் காப்பகத்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட 300 நாய்களுக்கு மேல் உணவளித்தும் பராமரித்து வருகிறோம். எங்கள் அமைப்பின் பிரதிநிதியாக, இந்த சமூக சேவைக்காக தமிழக ஆளுநரிடம் 2016ல் விருது வாங்கியுள்ளேன்.

தற்போது கரோனா பரவல்,பொதுமுடக்கம் காரணமாக உணவளிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை  வாங்குவதில் சவால் இருந்தாலும் நாள் தவறாமல் விலங்குகளுக்கு உணவளிக்கிறோம். எனது குடும்பத்தினர்,நண்பர்கள் ஆதரவாக இருப்பதால் என்னால் இதனைச் செய்ய முடிந்தது. இதேபோல ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்களால் இயன்ற உணவை அளிக்க வேண்டும்' என்று கூறுகிறார். 

மேலும்,  'யார் ஒருவர் பசித்த விலங்குக்கு உணவளிக்கிறாரோ அவர் தனது ஆன்மாவிற்கும் சேர்த்து உணவளிக்கிறார்' என்ற சார்லி சாப்ளினின் வரியையும் மேற்கோளிட்டு காட்டுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com