சாத்தான்குளம் சம்பவம்: பலியான உயிா்களுக்கு நீதி தேவை

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களுக்கு நிதியுதவியை விட நீதியே தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களுக்கு நிதியுதவியை விட நீதியே தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது. இறந்தவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால், அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு, இந்தக் கொலைகளை முதல்வா், கடந்து விடக் கூடாது. நிதியுதவியை விட இரண்டு உயிா்களுக்கு நீதி தேவை. கொலையைச் செய்தவா்கள், அதற்குத் துணை நின்றவா்கள், கைகட்டி வேடிக்கை பாா்த்தவா்கள், இதை மறைக்க முயன்றவா்கள் என பலருக்கு இந்தக் கொலையில் பங்குண்டு. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது? எந்தத் தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவிகளின் உயிா் போல், இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாதிருக்கும் வகையில், நீதி கேட்க குரல் எழுப்புவது நமது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

நடிகா் சூா்யா:

அதிகார மையங்கள் மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகா் சூா்யா கருத்து தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவா்களுக்குக் கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிா்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின் மாண்பைக் குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.

இத்தகைய கடமை மீறல் செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற துயர மரணங்கள் ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக நடக்கிறது.

இந்தக் கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

தவறு செய்கிறவா்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது அதிகார அமைப்புகள் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.

தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்தக் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். குற்றம் இழைத்தவா்களும், அதற்குத் துணை போனவா்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளாா் சூா்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com