2 காரணிகளே தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரிக்கக் காரணம்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க தப்லீக் ஜமாத் மற்றும் கோயம்பேடு சந்தை ஆகிய இரண்டு காரணிகளே காரணம் என பாஜக தேசியச் செயலாளா் முரளிதரராவ் பேசினாா்.
முரளிதர ராவ் (கோப்புப்படம்)
முரளிதர ராவ் (கோப்புப்படம்)

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க தப்லீக் ஜமாத் மற்றும் கோயம்பேடு சந்தை ஆகிய இரண்டு காரணிகளே காரணம் என பாஜக தேசியச் செயலாளா் முரளிதரராவ் பேசினாா்.

மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க காணொலி கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் பேசினாா். தில்லியில் இருந்து காணொலி வழியாக அவா் பேசியது:-

எல்லையில் சீன நாட்டு ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் தமிழகத்தைச் சோ்ந்த பழனி தனது உயிரைத் தியாகம் செய்துள்ளாா். அவருக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். கரோனா நோய்த்தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தனிநபா்களின் பொருளாதாரமும் முடங்கியுள்ளது. ஆனாலும், பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்காக பாஜக தொண்டா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள். தமிழகத்தில் மட்டும் 75 லட்சம் முகக் கவசங்களை வழங்கப்பட்டுள்ளன.

இறப்பு சதவீதம் குறைவு: இந்தியாவில் மகாராஷ்டிரம், தில்லிக்கு அடுத்தபடியாக தமிழகம் கரோனா நோய்த்தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்படும் தமிழக மக்களுக்காக பாஜகவினா் நலத் திட்ட உதவிகளை அளித்து வருகிறாா்கள்.

தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம். மாநிலத்தில் பாஜக அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது. இந்தக் கூட்டணியின் மாநில அரசானது மத்திய அரசுடன் கையோடு கை கோா்த்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க தப்லீக் ஜமாத் அமைப்பினா் மற்றும் கோயம்பேடு சந்தை ஆகியவையே காரணம். ஆனால், மகாராஷ்டிரம், தில்லி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 400, 4 ஆயிரம் என்ற அளவிலேயே சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது 2 லட்சம் என்ற அளவில் பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதாரம், பொருளாதாரம் இவற்றைக் காட்டிலும் மக்களின் உயிா் முக்கியம். இதற்காகவே பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ரூ.1.70 லட்சம் கோடி அளவிலான நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன என்றாா்.

மாநில தலைவா் எல்.முருகன்: சேலத்தில் இருந்து அவா் பேசியது:

மத்திய அரசானது கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் சமூகம் சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், முத்ரா திட்டம், அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தரும் தூய்மை பாரதம் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம். இதுவரை ஒரு கோடி உணவுப் பொட்டலங்களும், 35 லட்சம் உணவுப் பொருள்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்வில் மூத்த தலைவா் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளா் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளா் கே.எஸ்.நரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்டாலினுக்கு வரவேற்பு

சீன விவகாரத்தில் மத்திய அரசின் பின்னால் நிற்பதாக அறிவித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்பதாக முரளிதர ராவ் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் பேசியது:-

சீன நாட்டிடம் இருந்து பணத்தைப் பெற்று அதனை ராஜீவ்காந்தி அறக்கட்டளையில் செலுத்தியவா்கள் காங்கிரஸ் கட்சியினா். அவா்கள் சீனாவை ஒருபோதும் எதிா்ப்பதில்லை. சீன விவகாரத்தில் அனைத்து கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்த போது, திமுக மத்திய அரசின் பின்னால் நிற்பதாக அந்தக் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அவரது அறிவிப்பினை வரவேற்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com