காரைக்கால் மாங்கனித் திருவிழா கோயிலுக்குள் பக்தர்களின்றி நாளை தொடங்குகிறது

காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறக்கூடிய மாங்கனித் திருவிழா, பொது முடக்கத்தால் பக்தர்களின்றி கோயிலுக்குள் 4 நாட்கள் என்கிற திட்டத்தில் நாளை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.
நாளை தொடங்குகிறது காரைக்கால் மாங்கனித் திருவிழா
நாளை தொடங்குகிறது காரைக்கால் மாங்கனித் திருவிழா

காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறக்கூடிய மாங்கனித் திருவிழா, பொது முடக்கத்தால் பக்தர்களின்றி கோயிலுக்குள் 4 நாட்கள் என்கிற திட்டத்தில் நாளை புதன்கிழமை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. தீவிர சிவபக்தராக வாழ்ந்த காலம் முதல் இறைவனிடம் ஐக்கியமானது வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் விமரிசையாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. சிவபெருமான் அம்மையார் இல்லத்துக்கு அமுதுண்பதற்கு செல்லும் நிகழ்வாக, பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் சிவபெருமான் பவழக்கால் சப்பரத்தில் அம்மையார் கோயிலுக்கு செல்லும்போது, பக்தர்கள் மீது மாங்கனி இறைப்பது சிறப்புக்குரியதாகும். இந்த நிகழ்வில் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.

காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழாவானது, நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால், இந்த திருவிழாவை பக்தர்கள் பங்கேற்பின்றி, கோயிலுக்குள் நடத்த  கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இவ்வகையில் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்க புதுச்சேரி அரசிடம் கோயில் நிர்வாகம் கோரியிருந்தது. இதற்கான ஒப்புதல் வந்த நிலையில், திட்டமிட்டவாறு கோயிலுக்குள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோயில் அறங்காவல் வாரியத்தினர்  செவ்வாய்க்கிழமை கூறியது: 

மாங்கனித் திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்குள் நடத்தப்படுகிறது. திருக்கல்யாணம், அமுதுபடையல் போன்ற நிகழ்ச்சிகள் அம்மையார் கோயிலில் நடத்தப்பட்டுவந்த முறையானது, நிகழாண்டு கைலாசநாதர் கோயிலுக்குள்ளேயே நடத்தப்படுகிறது.

இதன்படி ஜூலை 1-ஆம் தேதி புதன்கிழமை மாலை 7 மணிக்கு மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைச் சாற்றி புறப்பாடு நடைபெறுகிறது. 3-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

4-ஆம் தேதி சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோயில் உள் பிராகாரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல்), மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பரமதத்த செட்டியார் இரண்டாவது திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் www.karaikaltemples.com யூ டியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக காணலாம். கோயிலுக்குள் அறங்காவலர்கள் 5 பேர், நிகழ்ச்சியின் உபயதாரர்கள் 5 பேர், சிவாச்சாரியார்கள் மட்டுமே இருப்பார்கள் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com