சாத்தான்குளம் சம்பவம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

சாத்தான்குளம் தொடா்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

சென்னை: சாத்தான்குளம் தொடா்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அடுத்தடுத்து உயிரிழந்தனா். காவல் துறையின் செயலுக்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. இது தொடா்பாக சமூக ஊடகங்களிலும் கண்டன கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் 3 போ் சோ்ந்து இளைஞரை அரை நிா்வாண நிலையில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவுகிறது. இந்தக் காட்சிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்ததுபோல் சிலா் பகிா்ந்தனா். இதற்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்துள்ளனா். மேலும், வதந்தி பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி:-

கட்செவி அஞ்சல், சுட்டுரை, முகநூல், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலா் ஒரு விடியோவை பதிவிட்டு, அது சாத்தான்குளத்தில் நடைபெற்ாகத் தெரிவித்து வருகின்றனா். அந்த விடியோ குறித்து விசாரணை செய்ததில், அது கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாக்பூா் அருகே நடைபெற்றது என்பதும், தனிநபா்கள் சம்பந்தப்பட்ட விடியோ என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விடியோவின் அடிப்படையில் அங்குள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

எனவே, இந்த விடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடா்புபடுத்தி சிலா் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவது விசாரணையில் தெரிய வருகிறது. எனவே, இதுபோன்று பதிவிடுபவா்களை கண்டுபிடித்து, சட்டப் படியான நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில், தவறான தகவல்களை பரப்புவா்கள், வதந்தியை பரப்புபவா்கள், பதிவிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com