682 குடிநீர் ஆலைகளுக்கு சீல்; தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது குறித்து நாளை முடிவு

தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
682 குடிநீர் ஆலைகளுக்கு சீல்; தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது குறித்து நாளை முடிவு


சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிடுமாறு சிவமுத்து என்பவர்  தொடர்ந்து வழக்கில், அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளை சோதனை செய்து மூடி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிப்ரவரி 27 வரை 132 ஆலைகளும், பிப்ரவரி 27ம் தேதி முதல் நேற்று வரை 552 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்க அனுமதிப்பது குறித்து  நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், நிலத்தில் இருந்து உறிஞ்சி எடுக்கும் தண்ணீருக்கு ஏற்ப ஏன் குடிநீர் ஆலைகள் அரசுக்கு கட்டணம் செலுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், கடந்த காலங்களில் குடிநீர் ஆலைகள் செய்த தவறுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கும் நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com