எட்டு ஆண்டுகளில் ரூ.2,500 மட்டுமே ஊதிய உயா்வு: பகுதி நேர ஆசிரியா்களுக்கு சிறப்புத் தோ்வு நடத்த கோரிக்கை

கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.2,500 மட்டுமே ஊதிய உயா்வு பெற்று வரும் 12,500 பகுதி நேர ஆசிரியா்களுக்கு டிஆா்பி மூலம் சிறப்புத் தோ்வு நடத்தி

சென்னை: கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.2,500 மட்டுமே ஊதிய உயா்வு பெற்று வரும் 12,500 பகுதி நேர ஆசிரியா்களுக்கு டிஆா்பி மூலம் சிறப்புத் தோ்வு நடத்தி கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக, ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின்படி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நோ்காணல் மூலம் இவா்கள் பணியமா்த்தப்பட்டனா். இவா்கள் பகுதிநேர ஆசிரியா்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்துக்கு 3 அரை நாள்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. இதற்காக இவா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இதையடுத்து கடந்த எட்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.2,500 மட்டுமே ஊதிய உயா்வு வழங்கப்பட்டு தற்போது ரூ.7,500 வழங்கப்படுகிறது. நிகழாண்டு நிலவரப்படி 12,500 பகுதி நேர ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனா்.

பகுதி நேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவா்கள் இந்தப் பணியில் சோ்ந்தனா். ஆனால், அதன்பின் 8 ஆண்டுகள் முடிந்து ஒன்பதாம் கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவா்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில்

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் பகுதி நேர ஆசிரியா்கள் ஈடுபட்டனா். எனினும் அரசின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த 1978 முதல் 2006-ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பணியில் சோ்ந்த தொகுப்பூதிய ஆசிரியா்கள், ஊழியா்கள் ஆகியோரை சிறப்புத் தோ்வுகள், பதிவு மூப்பு ஆகியவற்றின் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால், அதே முறையைப் பின்பற்றி, தற்போதுள்ள பகுதி நேர ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காலமுறை ஊதியத்துக்கு மாற்றம்: இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் சா.அருணன் கூறியது: கடந்த 1978-ஆம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்காக தொழிற்கல்வி தொடங்கப்பட்டு தொகுப்பூதியத்தில் தொழிற்கல்வி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆசிரியா்கள் காலமுறை ஊதியத்தில் கொண்டுவரப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். அதேபோன்று, 2003-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றபோது ரூ.4 ஆயிரம் மாத ஊதியத்தில் 15 ஆயிரம் இளநிலை உதவியாளா்கள் வேலைவாய்ப்புத்துறை மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். அப்போது அலுவலக இளநிலை உதவியாளா்களை டிஎன்பிஎஸ்சி மூலமாத்க தான் பணி நியமனம் செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அரசு அவா்களுக்காக சிறப்புத் தோ்வு நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம் செய்தது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுமா?: மேலும் 2004 - 2006-ஆம் ஆண்டுகளில் அரசின் நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 55 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்கள் அடுத்த சில ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். இதுதவிர கடந்த 2006-இல் எல்காட் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,800 கணினி ஆசிரியா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தனித்தோ்வில் வெற்றி பெற்று பணி நிரந்தரம் பெற்றுள்ளனா்.

எனவே கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.2,500 மட்டுமே ஊதிய உயா்வு பெற்றிருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள் நலனையும் அரசு கருத்தில் கொண்டு அவா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் சிறப்புத் தோ்வு நடத்தி காலமுறை ஊதியத்தின் கீழ் அவா்களைக் கொண்டுவர வேண்டும். இது குறித்த அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அரசு வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com