பருத்திக்கான விலை முன்னறிவிப்பு

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பருத்திக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பருத்திக்கான விலை முன்னறிவிப்பு


கோவை: பருத்தி விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பருத்திக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உலகில் பயிரிடப்படும் முக்கிய பணப் பயிர்களில் பருத்தி முக்கியமானது. இது மொத்த உலக நார் இழை உற்பத்தியில் 25 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை உலகின் பருத்தி உற்பத்தியில் பாதி அளவுக்கு மேல் பங்களிக்கின்றன. அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வின்படி 2018-19-ஆம் ஆண்டில் உலக அளவில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியின் பரப்பளவு 32.9 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இது 2017-18 ஆம் ஆண்டை விட சற்றே குறைவாக உள்ளது. உலக பருத்தி மகசூல் 2018-19 ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 797 கிலோவாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டை விட சற்று குறைவாகவும் கடந்த 5 ஆண்டு சராசரியை விட 4 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.

2018-19-ஆம் ஆண்டில் பருத்தியின் உலகளாவிய உற்பத்தி 5.77 மில்லியன் டன்கள் ஆகும். அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பருத்தியின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக திகழ்கின்றன. மேலும், இந்த நாடுகள் ஒருங்கிணைந்து உலக ஏற்றுமதியில் 62 சதவீதம் பங்களிக்கின்றன. வியத்நாம், மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் பருத்தி இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகும்.

அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வின்படி, தற்போது சீனா, வியத்நாம் ஆகிய நாடுகளில் குறைவான தேவை, குறைவான நுகர்வு இருந்தபோதிலும் பாகிஸ்தான், பிரேசில், தான்சானியா ஆகிய பகுதிகளில் உற்பத்தி அதிகமாக உள்ளது. வியத்நாம், பாகிஸ்தான், தென் கொரியாவின் குறைவான இறக்குமதி இந்தியா, மலேசியாவின் குறைவான ஏற்றுமதியும் தற்போதைய உலக வர்த்தகத்தை குறைத்துள்ளன. தற்போது, பருத்தி உற்பத்தி நுகர்வு செய்யும் நாடுகளில் சந்தை நிலைத்தன்மை, கரோனா வைரஸ் தாக்கம் இவற்றால் உலக வர்த்தகம் பாதித்துள்ளது.

இந்திய பருத்தி சங்கத்தின் கணக்கின்படி, இந்தியாவில் பருத்தி சாகுபடி 2019-20-ஆம் ஆண்டில் 1.26 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.22 கோடி பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. பருத்தி நுகர்வு 3.31 கோடி பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2018-19 ஆம் ஆண்டைவிட 6 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்தியா 2018-19-ஆம் ஆண்டில் 65 லட்சம் பொதிகள் பருத்தியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய பருத்தி சங்கம் 2019 அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய பருத்தி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா 10 லட்சம் பொதிகள் பருத்தியை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 2020 வரை மொத்த ஏற்றுமதியில் 42 லட்சம் பொதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து பருத்தி, வங்கதேசம், சீனா, வியத்நாம், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, ஹரியாணா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இம்மாநிலங்கள் இந்திய மொத்த பருத்தி உற்பத்தியில் 97 சதவீதம் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் பருத்தி ஜனவரி, பிப்ரவரி, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2018-19-ஆம் ஆண்டில் 1.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு 5 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2017-18 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 9.6 சதவீதம் குறைவாகும்.

தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கு மேல் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மரபணு மாற்றப்படாத ரகங்களில் விவசாயிகள் முக்கியமாக எம்.சி.யு.5 கலப்பின ரகத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர். தற்போதைய நிலையில் நீண்ட இழை பருத்தி ரகத்தின் சந்தை விலை குவிண்டாலுக்கு ரூ.4,900 முதல் ரூ. 5,200 வரை உள்ளது.

பருத்தி ஆலைகள் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் தேவைக்கேற்ப கொள்முதல் செய்கின்றன.  வர்த்தக மூலங்களின் படி, பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தில் பருத்தி வரத்து வரும் என அறியப்படுகிறது. மேலும் வரும் மாதங்களில் பருத்திக்கான தேவை நிலையாக இருந்த பொழுதும் வரத்து குறைந்து காணப்படுவதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் பருத்தி விவசாயிகள் பருத்தி விற்பனை, விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

பொருளாதார ஆய்வு முடிவின்படி, தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால் பருத்தி விலை வரும் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு ரூ. 5,100 முதல் ரூ.5,200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கொண்ட விலையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, பருத்தி துறையின் பேராசிரியரையோ தொடர்பு கொள்ளலாம். 0422-2431405, 2450507.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com