ஊழலுக்கு துணை போகும் உள்நோக்கம் கொண்டதோடு கல்வியை அவமானப்படுத்தும் செயல்: ஸ்டாலின் மீது பாயும் பாஜக!

ஊழலுக்கு துணை போகும் உள்நோக்கம் கொண்டதோடு கல்வியை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை பல்கலை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர்  ஸ்டாலின் மீது  தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை: ஊழலுக்கு துணை போகும் உள்நோக்கம் கொண்டதோடு கல்வியை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை பல்கலை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர்  ஸ்டாலின் மீது  தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக டெல்லி ஜே என்.யு துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தமிழக ஆளுநர் நியமித்தது குறித்து தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது வியப்பை தரவில்லை. மாறாக அவரின் ஊழலுக்கு துணை போகும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அண்ணா பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உட்பட பல துணைவேந்தர்கள் லஞ்ச , ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ள நிலையில்,  கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகங்கள் கல்வி கொள்ளையர்களின் கூடாரங்களாக செயல்பட்டு வந்ததை திரு. மு க ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள்,  துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம், மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், நிர்வாக ஊழல்கள் போன்றவை பெருமளவில் நடை பெற்று வந்த நிலையில், இவை அனைத்திற்கும் காரணம் தகுதியற்ற, திறமையற்ற, ஊழல் துணைவேந்தர்களின் மோசமான மற்றும் முறைகேடான நிர்வாகம் தான் என்பதை கண்டறிந்து திறமையான, தகுதியான துணைவேந்தர்களை பல்கலைக்கழகங்களுக்கு நியமனம் செய்யும் தற்போதைய தமிழக  ஆளுநரின் நல்ல முயற்சிக்கு எதிராக, "தமிழகத்தில் ஒரு துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு தலைவர் பதவிக்கான தகுதியுள்ள பொருத்தமானவர் யாரும் கிடைக்கவில்லை என்ற பொய் தோற்றத்தை இதன் மூலம் உருவாக்கி, கல்வி உலகில் அவமானப்படுத்துவதாக உள்ளது" என்று தி மு க தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஊழலுக்கு துணை போகும் உள்நோக்கம் கொண்டதோடு கல்வியை அவமானப்படுத்தும் செயலே.

இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக உண்மையிலேயே தகுதி வாய்ந்த ஒருவரை துணைவேந்தராக்கும்  ஆளுநரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. ஊழல் எனும் சாக்கடையில் ஊறி திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், தற்போதைய வேந்தரான தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் புனிதம் பெற்று வருகிறது. இதிலும் மாநில, மொழி என்னும் குறுகிய அரசியலை புகுத்தி ஊழலை தொடர்வதற்கான குரலை எழுப்பும் அரசியல் வாதிகள் வருங்கால தலைமுறைக்கு மிக பெரும் துரோகத்தை செய்பவர்களாகவே கருதப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com