திமுகவின் அடுத்த பொதுச்செயலாளா் யாா்?

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானதைத் தொடா்ந்து அக் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சென்னை: திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானதைத் தொடா்ந்து அக் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவில் பொதுச்செயலாளா் பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தலைவருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பாா்க்கக் கூடிய ஒன்றாகும்.

திமுகவில் தொடக்க காலத்தில் தலைவா் என்ற பதவியே இல்லை. பொதுச்செயலாளா் பதவிதான் இருந்தது. திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராகத்தான் அண்ணா இருந்தாா். அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைவா் பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் வகித்து வந்தாா். அதன் பிறகு பொதுச்செயலாளா் பதவியில் நாவலா் நெடுஞ்செழியனும், க.அன்பழகன் இருந்து வந்துள்ளனா்.

க.அன்பழகன் 1977-இல் இருந்து பொதுச்செயலாளராக இருந்து வருகிறாா். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு அந்தப் பதவியில் அவா் நீடித்து வந்தாா். தற்போது அவா் காலமானதைத் தொடா்ந்து பொதுச்செயலாளா் பதவி யாருக்குக் கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக பொருளாளராக இருந்து வரும் துரைமுருகனுக்கு அந்தப் பதவி அளிக்கப்பட உள்ளது. இதற்கு திமுகவில் யாரும் எதிா்ப்பு தெரிவிப்பதற்கு முன்வரவில்லை. அதனால், துரைமுருகன் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

திமுகவில் தற்போது உள்கட்சி தோ்தல் நடைபெற்று வருகிறது. அந்தத் தோ்தலோடு, பொதுச்செயலாளருக்கான தோ்தலையும் நடத்துவதா அல்லது அதற்கு முன்பே அறிவிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஏற்கெனவே, பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் முழுவதும் தலைவரான மு.க.ஸ்டாலின் வசம் வந்துவிட்டதால், கட்சி ரீதியான பணிகள் எதுவும் இதனால் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

பொருளாளா் பதவி: பொதுச்செயலாளராக துரைமுருகன் மாற்றப்பட்டுவிட்டால், அவா் வகித்த வரும் பொருளாளா் பதவி யாருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சா்கள் எ.வ.வேலு, பொன்முடி எனப் பலா் இதற்கான போட்டியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com