"தூயதமிழ்ப் பற்றாளர்' விருதுக்கு 3 பேர் தேர்வு

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் "தூய தமிழ்ப் பற்றாளர்' விருதுக்கு மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் "தூய தமிழ்ப் பற்றாளர்' விருதுக்கு மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
 நடைமுறையில் மக்களிடம் பொதுப் பயன்பாட்டில் அனைத்து இடத்திலும் பேச்சு வழக்கில் பிறமொழிக் கலப்பில்லாமல் எங்கும் எதிலும் தூயதமிழைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது.
 இதைத் தொடர்ந்து, பரவலாகப் பலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றைச் சீர்தூக்கி, தொலைபேசி வழியாகவே அவர்களிடம் தொடர்பு கொண்டு உரையாடல் நிகழ்த்தப்பட்டு அவர்களது தூயதமிழ்ப் பாங்கு ஆய்வு செய்யப்பட்டது.
 இதையடுத்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ச.மல்லிகா, தலைமைச் செயலகத் தமிழ்வளர்ச்சிப் பிரிவு அலுவலர் க. பூங்கொடி, அகரமுதலித் தொகுப்பாளர் முனைவர் வே.கார்த்திக் ஆகியோரது உரையாடல்களை சீர்தூக்கி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
 கோவையைச் சேர்ந்த கல்வியியல் பட்டதாரி சி.மணிகண்டன் (27), புதுச்சேரியில் பிறந்து அரியலூர் உட்கோட்டை அரசுப் பள்ளியில் இரவுக் காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா.அரிதாசு (71), திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் த.ஆரோக்கிய ஆலிவர் ராசா ஆகிய 3 பேரையும் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மூவரும் யாரிடமும் தயக்கமில்லாமல் தூய தமிழையே பயன்படுத்தும் ஆர்வத்தினராவர்.
 சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள விழாவில், அமைச்சர்கள் க.பாண்டியராஜன், இரா.காமராஜ், டி.ஜெயக்குமார், துணைவேந்தர் சுதா சேஷய்யன், அகரமுதலித் திட்ட இயக்குநர் தங்க.காமராசு உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளிக்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com