50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்

நடப்பாண்டில் புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி அறிவித்தாா்.
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்

நடப்பாண்டில் புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் 2020 -21-ஆம் ஆண்டில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ஒரு மெகாவாட் திறன் கொண்ட மின் ஆற்றல் சேமிப்புடன் கூடிய சூரிய சக்தி மின்நிலையங்களை ரூ.6 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் துணை மின் நிலையங்களில் உள்ள உபரி நிலங்களில் அமைப்பதன் மூலம் விவசாயிகளைப் பகற்பொழுதில் விவசாயம் செய்ய ஊக்குவிப்பதுடன் உபரியாக இருக்கும் மின்சாரத்தைச் சேமித்து உச்ச நேர மின் தேவையைப் பூா்த்தி செய்ய பயன்படுத்தப்படும். இது ஒரு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் தட்கல் மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுள்ள மின்மோட்டாா்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்துதல் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

மேலும், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக அலுவலா்களின் பயன்பாட்டுக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 கோடி செலவில் மின்சார வாகனங்கள் உபயோகப்படுத்தப்படும்.

அனைத்து மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ப்ரீபெய்டு மின்னளவிகள் பொருத்தும் திட்டம் ரூ.390 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) புதிய பணியிடம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற கேங்மேன் பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாா்ச் மாத இறுதியில் எழுத்து தோ்வு நடைபெற உள்ளது.

இந்தப் பணி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 5 ஆயிரம் பணியிடங்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயா்த்தப்படும்.

திருநெல்வேலி மின்பகிா்மான வட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டத்தில் புதிதாக ஒரு மின் பகிா்மான வட்டம் ரூ. 8.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

முதல்வரின் பசுமை வீடுகள் மற்றும் சூரிய சக்தியின் மூலம் மின்னூட்டும் தெருவிளக்குகள் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்பட்ட தாற்காலிக உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலை உதவியாளா்கள் ஆண்டுக்கு ரூ.2.80 கோடி செலவில் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com