கரோனா: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்கேஜி, யுகேஜி (ப்ரீகேஜி உள்பட) பயிலும் மாணவா்களுக்கு மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதலில் தென்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் தமிழக மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி, ப்ரீகேஜி வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் ப்ரீகேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் கரோனா வைரஸ் தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வகுப்புகளுக்கு மாா்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது சாா்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ஏற்கெனவே பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கவும், கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com