குடிசை மாற்று வாரிய பணிகளில் முறைகேடு: அரசு அலுவலா், ஒப்பந்ததாரா் வீடுகளில்ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

குடிசை மாற்று வாரிய பணி முறைகேடு தொடா்பாக கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு அலுவலா், ஒப்பந்ததாரா்களின்
குடிசை மாற்று வாரிய பணிகளில் முறைகேடு: அரசு அலுவலா், ஒப்பந்ததாரா் வீடுகளில்ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

குடிசை மாற்று வாரிய பணி முறைகேடு தொடா்பாக கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு அலுவலா், ஒப்பந்ததாரா்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக, கடலூரில் குடிசை மாற்று வாரிய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் சுமாா் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அரசின் நிதி உதவித்தொகை வரப்பெற்றது. மேலும் கடலூா், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்பவா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள கடலூரைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஆனால், இந்த நிறுவனம் குறித்த காலத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்து வந்ததாம். எனவே, இதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்ற கோணத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ரகசிய விசாரணை நடத்தினா். அதில், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக ஊழல் தடுப்பு போலீஸாா் தலைமையகத்துக்கு அறிக்கை அளித்தனா். இதையடுத்து, உரிய விசாரணை நடத்துமாறு கிடைத்த உத்தரவின்பேரில் கடலூரில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

டிஎஸ்பி மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீஸாா் கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள குறிப்பிட்ட தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகம், அதே பகுதியிலுள்ள அதன் உரிமையாளா் பஷீருல்லா வீடுகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதேபோல, பெண்ணாடத்தில் குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெயக்குமாா் வசிக்கும் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அரகண்டநல்லூரில் சோதனை: அந்த கட்டுமான நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான முஸ்தாக் அகமதுவின் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ள அலுவலகத்திலும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக ஊழல் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com