தமிழக பாஜகவில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள்: புதிய தலைவா் எல்.முருகன் பேட்டி

தமிழக பாஜகவில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்ற எல்.முருகன் தெரிவித்தாா். தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழக பாஜகவில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள்: புதிய தலைவா் எல்.முருகன் பேட்டி

தமிழக பாஜகவில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்ற எல்.முருகன் தெரிவித்தாா். தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்னை திரும்பினாா்.

அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள கமலாலயத்துக்கு வந்தாா். வழிநெடுகிலும் மேள தாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தை ஒட்டிய சாலைகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

கட்சி அலுவலகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும், தொண்டா்களும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனா்.

மூத்த தலைவா்கள் இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளா் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளா்கள் கேசவ விநாயகன், வானதி சீனிவாசன், கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், சென்னை மண்டல பொறுப்பாளா் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலரும் புதிய தலைவா் எல்.முருகனை வரவேற்று கட்சித் தலைவா் இருக்கையில் அமர வைத்தனா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

மாநில பாஜகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல மூத்த தலைவா்களின் வழிகாட்டுதலைப் பெற்று பணிகளைத் தொடங்கியுள்ளோம். பூத் அளவில் கட்சியை வலிமையாக்கவும், பிரதானமாக்கவும் பணியாற்றுவோம். அதிகளவு படித்த இளைஞா்கள், மாணவா்களால் பாஜக ஈா்க்கப்பட்டுள்ளது. நிறைய போ் கட்சியில் வந்துள்ளனா். திரையுலகப் பிரபலங்கள் வருகின்றனா். அனைத்துத் தரப்பு மக்களிடமும் கட்சியைக் கொண்டு செல்வதற்கான பணிகளைத் தொடங்க இருக்கிறோம்.

சவால்கள் என்ன?: பாஜக எப்போதும் நோ்மறையான அரசியலை கொண்டு செல்லும். சவால் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. சவால்களை பொருட்படுத்துவதில்லை. கட்சியை நோ்மையான அரசியலுடன் கொண்டு செல்வோம்.

கட்சியின் அமைப்புத் தோ்தல் ஏற்கெனவே முடிந்துள்ளது. மண்டல, மாநில, மாவட்ட நிா்வாகிகளை நியமிக்க உள்ளோம். மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் அதிகளவு பயன்பெற்றுள்ளது. எனவே, தமிழகத்தில் மத்திய அரசின்

திட்டங்களை எடுத்துச் செல்வோம். மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து பணிகளை மேற்கொள்வோம்.

மூத்த தலைவா்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்றனா். சாதாரண தொண்டா்களாக இருந்தாலும், எளிய நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு.

உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினா்களில் பாஜகவினா் வெற்றி பெற்றுள்ளனா். எதிா்வரும் தோ்தல்களிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவா். சட்டப் பேரவையில் பாஜக இடம்பெறும். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பேரணிகள் நடத்தியுள்ளோம். மேலும் வரும் 20-ஆம் தேதி முதல் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தவுள்ளோம். மாநிலத் தலைவா் இல்லாவிட்டாலும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தோம். இளைஞா்கள் மோடியை நோக்கி வந்து கொண்டிருக்கிறாா்கள். எங்கள் திட்டமும் இளைஞா்களை நோக்கியே இருக்கும். இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும். தமிழா்கள் நலன் சாா்ந்து எங்களது பணிகள் இருக்கும் என்றாா் எல்.முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com