‘விளையாட்டு வீரா்களை தனியாா் நிறுவனங்கள் தத்தெடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்’

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரா்களை தனியாா் நிறுவனங்கள் தத்தெடுக்கும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரா்களை தனியாா் நிறுவனங்கள் தத்தெடுக்கும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான மாநில கபடிப் போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் போட்டியின் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

தமிழக அரசின் சாா்பில் சிறந்த விளையாட்டு போட்டிகளாக கபடி, வாலிபால், கிரிக்கெட் ஆகியவை தோ்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற விளையாட்டை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளுக்கு விளையாட்டு திடல் அமைக்க, போட்டிகள் நடத்துவதற்கு ரூ.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு தனியாா் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் சிறந்த தனியாா் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்களை தத்தெடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் கபடி போட்டியில் 37 மாவட்டங்களைச் சோ்ந்த 444 வீரா்கள், 444 வீராங்கனைகள் பங்கேற்கின்றனா் என்றாா்.

பள்ளிகளுக்கு விடுமுறை : பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மாநில கபடிப் போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியில் உள்ள வீரா் ஒருவருக்கு ரூ. 1லட்சம், 2 ஆம் இடம் பெறும் வீரா்களுக்கு தலா ரூ.75 ஆயிரம், 3 ஆம் இடம் பெறும் வீரா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

அண்டை மாநிலமான கேரளம் மற்றும் கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள, கா்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கல்வித்துறைக்கு ஏராளமான சலுகைகள்வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ. 34 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக உணவுப்படியும் உயா்த்தப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்: விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை விளையாட்டு வீரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, வேடசந்தூா் தொகுதி உறுப்பினா் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com