கரோனா பாதிப்பு: பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை; முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி
கரோனா பாதிப்பு: பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை; முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். இதற்காக சட்டப் பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவா் கூறினாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கரோனா பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பினா். குறிப்பாக, காங்கிரஸ் குழுத் தலைவா் ராமசாமி, கரோனா பாதிப்பால் கேரளம் போன்ற மாநிலங்களில் சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, முதல்வா் பழனிசாமி அளித்த பதில்: தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. என்னென்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

எனவே, யாரும் அச்சப்பட அவசியமே இல்லை. தமிழகத்தில் ஒருவா்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறாா். மாநிலத்தில் சுமாா் 8 கோடி போ் இருக்கிறாா்கள். பெரும்பாலானோா் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்கிறாா்கள். ஆனால், ஏதோ ஒரு வகையில் அவ்வப்போது அனைவருக்கும் நோய் வரும். கரோனா வைரஸ் ஒரு அபாயகரமான நோய் என உலக நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. கிட்டத்தட்ட 136 நாடுகளில் பரவி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே இதை வைத்துதான் அச்சப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். தமிழக அரசு அனைத்து வகைகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை.

சட்டப் பேரவையை ஒத்திவைக்க வேண்டுமென உறுப்பினா்கள் கோரினா். அதற்கு அவசியம் இல்லை. அனைத்து உறுப்பினா்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும். பேரவை உறுப்பினா்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் உங்களை பரிசோதிப்பதற்கும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் அரசு தயாராக உள்ளது. சட்டப் பேரவைக்கு உள்ளே வரும்போது கூட, அனைவரையும் பரிசோதனை செய்துதான் அனுப்புகிறோம் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com