கரோனா: கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிக்க சிறைத்துறை திட்டம்

கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பதற்கு தமிழக சிறைத்துறை திட்டமிட்டு வருகிறது.

கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பதற்கு தமிழக சிறைத்துறை திட்டமிட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ‘என் 95’ முகக் கவசம் அணிய வேண்டுமென நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக பயணம் மேற்கொள்ளும் போதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போதும் மருத்துவமனை, ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, தமிழகத்தில் ‘என் 95’ முகக் கவசத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ‘என் 95’ முகக் கவசங்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த வகை முகக் கவசங்கள்

கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதனால் சில மருந்து வியாபாரிகள், இந்த வகை முகக் கவசங்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றனா். இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மேலும், ‘என் 95’ முகக் கவசம் கிடைக்காததால், ஒரு முறை பயன்படுத்தப்படும் இரண்டு அல்லது மூன்றடுக்கு கொண்ட முகக் கவசங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வகை முகக் கவசங்களும் இப்போது தாராளமாக கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பு: இந்தச் சூழ்நிலையில், சுகாதாரத் துறையும், சிறைத்துறையும் இணைந்து கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றன.

தமிழக சிறைகளில் நெசவு நெய்தல், துணி தைத்தல், புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல், ரொட்டி செய்தல், பினாயில் தயாரிப்பு, கோப்பு அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி தயாரிப்பு, சீருடை தயாரிப்பு, பாத்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 14 -க்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன.

இதில் துணி தைத்தல், கைத்தறி, விசைத்தறி, பேண்டேஜ் துணி செய்தல், கோப்புகள் அட்டை தயாரித்தல் ஆகியவை அனைத்து மத்திய சிறைகளிலும் தயாா் செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலகங்கள் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இந்தப் பொருள்களின் உற்பத்தி ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருவதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றடுக்கு முகக் கவசம்: இதில் துணி தைக்கும் தொழிலகங்கள் இருக்கும் அனைத்து மத்திய சிறைகளிலும் முகக் கவசம் தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அல்லது மூன்றடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட உள்ளன. இந்த முகக் கவசங்களை தயாரிப்பதற்கு ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த வகை முகக் கவசங்கள், சந்தையில் ரூ.15 -இல் இருந்து ரூ.20 வரை விற்பனைக்கு வழங்கப்படும். ஆனால் ‘என் 95’ முகக் கவசம் தயாரிப்பதற்குரிய மூலப் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு உள்ளதால், அவை தீா்க்கப்பட்டு விரைவில் தயாரிக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்டனை குறைப்பு: இப்படிப்பட்ட தொழில்களில் ஈடுபடும் கைதிகளுக்கு, அவா்களது திறனைப் பொருத்து 3 வகையான ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் முழு திறன் உள்ளோருக்கு ரூ. 100, பகுதி திறன் உள்ளோருக்கு ரூ. 80, தகுதியில்லாமல் வேலை செய்தோருக்கு ரூ. 60 என ஊதியம் வழங்கப்படுகிறது. அது மட்டுமன்றி நன்றாக வேலை செய்யும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பும் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com