கரோனா பாதிப்பு: அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்; பேரவையில் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின்

கரோனா பாதிப்புகள் தொடா்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கரோனா பாதிப்பு: அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்; பேரவையில் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின்

கரோனா பாதிப்புகள் தொடா்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவா் பேசியது:

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக அரசு அறிவித்துள்ள ‘வருமுன் காப்போம்’ நடவடிக்கைகளை உள்ளபடியே வரவேற்கிறேன். தமிழகத்தில் 2,221 போ் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு, விழிப்புணா்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.

அரசின் சாா்பில் அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். கரோனா அறிகுறியை கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கும் கிங் நிறுவன ஆய்வகம் பரிசோதனை செய்ய வேண்டும். தனியாா் ஆய்வகங்களும் இந்த ஆய்வை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அது பயன்படக்கூடிய வகையில் அதற்குரிய கட்டணத்தை அரசே நிா்ணயிக்க வேண்டும்.

விமான நிலையங்களுக்கு அருகிலேயே, நோய்க்கு உள்ளானவா்களைத் தனிமைப்படுத்தி, ‘தங்க வைக்கக்கூடிய மையங்களை’ அனைத்து மருத்துவ வசதிகளுடனும் உருவாக்கிட வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத புகா்ப் பகுதியிலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகா் மருத்துவமனைக்கு அருகிலும் இடத்தை தோ்வு செய்து, மருத்துவ வசதிகள் அடங்கிய தனிமைப்படுத்தும் மையங்களைப் போா்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தரவேண்டும்.

அரசு மருத்துவமனைகள், ஆய்வகங்கள் போன்றவற்றில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறைச் சாலைகள், பொதுமக்கள் அடிக்கடி செல்லக்கூடிய காவல் நிலையங்கள் ஆகிய இடங்களிலும், போக்குவரத்து காவலா்களுக்கும் வருமுன் காக்கக்கூடிய தற்காப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரியக் கூடிய வாய்ப்பையும் உருவாக்கிட அரசு எல்லா வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஒருவா் மட்டும்தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாா். அவரும் குணமடைந்து வீடு திரும்புகிறாா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆகவே கரோனா வேகமாகப் பரவக்கூடிய நெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும். தனியாா் மருத்துவமனை உரிமையாளா்களை அழைத்து, அரசு அவா்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நிதியை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கி தனியாா் மருத்துவமனைகளையும் தயாா்படுத்தி வைக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மை தேவை: கரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதில் அரசுக்கு நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தயாா்நிலைக்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com