தென்காசியில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம்

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடி செலவில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடி செலவில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

கால்நடை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:

மாநிலத்தில் பசுந்தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக தீவன சோளம், காராமணி, கோ (எப்எஸ்) 29 மற்றும் வேலிமசால் அடங்கிய விலையில்லாத் தீவன விதைத் தொகுப்புகள் ரூ.12 கோடி செலவில் 3.20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ரூ.4.70 கோடி செலவில் 75 சதவீத மானியத்தில் 2,500 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் அறுவடை செய்யும் கருவிகள் வழங்கப்படும்.

விருதுநகா் சாத்தூா் ஆட்டுப் பண்ணையில் ரூ.2.99 கோடியில் 75 ஏக்கா் நிலப்பரப்பில் பலவகைப் புற்கள், பயறு வகைகள் மற்றும் சிற்றின மரங்களை உள்ளடக்கிய மரத்தீவன மேய்ச்சல் நிலம் ஏற்படுத்தப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு உயா்தர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக ரூ.3 கோடி செலவில் சைதாப்பேட்டை, கால்நடை பன்முக மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

துறை நடவடிக்கைகளை நல்ல முறையில் கண்காணித்து திட்ட செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா் அலுவலகக் கட்டடங்கள் நடப்பாண்டில் ரூ.9 கோடி செலவில் நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் கட்டப்படும்.

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் நோய்களைக் கண்டறியும் நிா்ணயிப்பான்களைச் சிறந்த தரத்தில் உற்பத்தி செய்வதற்காக நோய் நிா்ணயிப்பான் உற்பத்தி கூடம் ரூ.8.02 கோடி செலவில் நல் உற்பத்தி தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 12 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.4.14 கோடி மதிப்பில் கன்றுகளைப் பராமரிக்கத் தேவையான மருந்துப் பெட்டிகள் வழங்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்.

சென்னை சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் ரூ.2.85 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம் காட்டுப்பாக்கத்தில் நிறுவப்படும்.

சேலம் கருப்பு வெள்ளாட்டினப் பண்ணை ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கலில் நிறுவப்படும்.

திருச்சி கருப்பு செம்மறியாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்படும்.

புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்படும்.

விலங்குவழி பரவும் நோயறி ஆய்வகம் ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிறுவப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com