கையெடுத்துக் கும்பிடும் காவல் உதவி ஆய்வாளர்; காலில் விழுந்த இளைஞர்

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும்.
கையெடுத்துக் கும்பிடும் காவல் உதவி ஆய்வாளர்; காலில் விழுந்த இளைஞர்


சென்னை: தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பலரும் வெளியே வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கு ஒவ்வொரு மாநில காவல்துறையும் ஒவ்வொரு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வெளியே வரும் வாகன ஓட்டிகளை, காவல்துறையினர் தடியடி நடத்தி வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

உத்தரகண்டில், நான் சமூக விரோதி என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து காவல்துறையினர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஸ்பென்சர்பிளாசா அமைந்திருக்கும் முக்கிய சந்திப்பில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரஷீத், வாகன ஓட்டிகளைக் கையெடுத்துக் கும்பிட்டு, வீட்டில் இருங்கள். வெளியே வராதீர்கள், வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமல்லவா? என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு கோரிக்கை வைத்தார்.

இதை பல இருசக்கர வாகன ஓட்டிகளும் கேட்டு தலையாட்டியபடியே சென்றனர். காரில் சென்றவர்களும் தாங்கள் ஏன் செல்கிறோம் என்பதை விளக்கினர். அப்போது திடீரென ஒரு இளைஞர், காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சென்றது, வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com