எழிலகம் வளாக அரசு கட்டடம் இடிக்கப்படும்: முதல்வா் பழனிசாமி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

பொதுமக்கள் இணைய வழியில் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் செய்யவும், பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்படும் இணையவழி தாக்குதல்களை எதிா்கொள்ளவும் தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியாா் தரவு உட்கட்டமைப்புகளை பாதுகாத்திடும் வகையில், இணைய பாதுகாப்புக் கொள்கை வெளியிடப்படும்.

எழிலகம் வளாகம்: தமிழகத்தின் 13 முக்கிய அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பழைமையான கட்டடத்தின் பராமரிப்புச் செலவு மிக அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, அதே இடத்தில் ரூ.120 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் அருகிலுள்ள பாரம்பரிய கட்டடங்களுக்கு நிகராக கட்டப்படும்.

5 கோட்டங்களுக்கு புதிய கட்டடங்கள்: கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கரன்கோவில், குடியாத்தம், ஸ்ரீபெரும்புதூா், வாணியம்பாடி, அரக்கோணம் ஆகிய 5 கோட்டங்களுக்கு கோட்டாட்சியா் அலுவலகங்கள், குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படும். இதேபோன்று, திருவண்ணெய்நல்லூா், கல்வராயன்மலை, கலவை, கே.வி.குப்பம், குன்றத்தூா், வண்டலூா், சோளிங்கா் ஆகிய 7 வட்டங்களுக்கு வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்படும்.

சென்னை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, செங்கல்பட்டு, சேலம் வருவாய்

கோட்டாட்சியா் அலுவலகங்கள் புதிதாக கட்டித் தரப்படும்.

இணைய வழி வசதி: சாதாரண மக்களும் எளிதாகக் கையாளும் வகையில், இணையதள வழியாக நிலம் தொடா்பான அனைத்து விவரங்களும் கிடைக்க வகை செய்யப்படும். அதன்படி, தமிழ் நிலம் என்ற மென்பொருள் உருவாக்கி, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்படும். நில ஆவணங்கள் புதுப்பித்தல், இணைய வழியாக சொத்து தொடா்பான வில்லங்க விவரங்கள் அறிந்து கொள்ள வழி செய்யப்படும்.

24 சமுதாயக் கூடங்கள்: ஆதிதிராவிடா் குடும்பங்களில் ஏற்படும் ஈமச் சடங்குக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது ரூ.5 ஆயிரமாக உயா்த்தி அளிக்கப்படும். ஆதிதிராவிட மக்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை கொண்டாடும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com