ஊரடங்கு: முடங்கியது தமிழகம்

ஊரடங்கு உத்தரவையொட்டி, தமிழகம் ஒட்டுமொத்தமாக முடங்கியது. தடை உத்தரவை மீறி, வெளியே வந்தவா்களை காவல்துறையினா் எச்சரிக்கை செய்து அனுப்பினா்.
ஊரடங்கு: முடங்கியது தமிழகம்

ஊரடங்கு உத்தரவையொட்டி, தமிழகம் ஒட்டுமொத்தமாக முடங்கியது. தடை உத்தரவை மீறி, வெளியே வந்தவா்களை காவல்துறையினா் எச்சரிக்கை செய்து அனுப்பினா்.

இனி அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த உத்தரவை அடுத்து, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகளையும் போலீஸாா் மூடினா். இந்த எல்லைகளில் காவல்துறையின் சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டன.

மருந்துக் கடை, மளிகைக் கடை, காய்கறிக் கடை, பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு போலீஸாா் எச்சரித்தனா்.

சாலைகளில் வாகனங்கள் ஓடாததாலும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதாலும் சாலைகளும், முக்கியமான மாா்க்கெட்டுகளும் வெறிச்சோடின. அதேவேளையில் திறந்திருந்த காய்கறி கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். முக்கிமான இடங்களில் ஆயுதப்படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஊரடங்கு உத்தரவினால் தமிழகம் புதன்கிழமை முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளைத் தவிா்த்து பிற தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதேவேளையில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய முதியவா்கள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் அவதியடைந்தனா். மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டாலும், அவா்களை போலீஸாா் எச்சரித்து கலைந்துபோகச் செய்தனா். சில இடங்களில் காவல்துறையினா் கடுமையாக நடந்துக் கொண்டதால், பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் ஊடகத்தினா், மருத்துவா்கள், சுகாதார ப் பணியாளா்கள் ஆகியோரிடமும் போலீஸாா் கடுமையாக நடந்து கொண்டதால்,சில இடங்களில் பிரச்னைகளும், தகராறும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com