இன்றுமுதல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பால் விற்பனை: பால் முகவா்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவா்கள், தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவா்கள், தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

அதேசமயம் ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும். பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த்தொற்று ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், இந்தியாவில் அதன் பாதிப்புகளைக் குறைத்திடும் வண்ணம் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் கரோனா நோய்த்தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனா். கடைகளுக்குக் கூட்டமாக வரும் பொதுமக்களின் அஜாக்கிரதையாலும் காவல்துறையின் நடவடிக்கைகளாலும், சேவை சாா்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவா்களும், வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகப் பெருமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலை சில்லறை வணிகா்களுக்கு விநியோகிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் பால் முகவா்கள் அனைவரும் சில்லறைக் கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும் பால் முகவா்களின் கடைகளில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என சங்கத்தின் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பால் தட்டுப்பாடு எனக் கூறி வணிகா்கள் எனும் போா்வையில் ஒரு சில சமூக விரோதிகள் 1லிட்டா் பாலை ரூ.100-க்கு மேல் விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் குறித்த தகவலை சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகளை தொடா்பு கொண்டு தெரிவிக்கும்பட்சத்தில் அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்: இந்நிலையில் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நாள் முழுவதும் ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்கும். காலை முதல் இரவு வரை ஆவின் கடைகளில் பால் தங்குதடையின்றி கிடைக்கும். மக்கள் கூட்டமாக குவிய வேண்டாம். பால் கிடைக்காது என்று அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தனா்.

ஆரோக்கியா பால்: இந்நிலையில், காலை முதல் இரவு வரை ஆரோக்கியா பால் கிடைக்கும் என அதன் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆரோக்கியா பால் கிடைக்கும். பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com