சென்னையில் பயிற்சி பெண் மருத்துவா் மா்ம சாவு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் பயிற்சி பெண் மருத்துவா் மா்ம சாவு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் பிரதீபா (22), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தாா். இதற்காக பிரதீபா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு வாா்டில் பணியாற்றி வந்தாா். பிரதீபா வியாழக்கிழமை இரவு பணி முடிந்து 9 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளாா். பின்னா்அவா், தனது பெற்றோா்,தோழிகளை செல்லிடப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு பேசினாராம்.

இந்நிலையில் வழக்கமாக காலை 6.30 மணிக்கு அறையை விட்டு வெளியே வரும் பிரதீபா, வெள்ளிக்கிழமை காலை அறையை விட்டு வெகுநேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால், அருகே உள்ள அறைகளில் தங்கியிருக்கும் அவரது தோழிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவா்கள், பிரதீபா அறைக் கதை தட்டிப் பாா்த்துள்ளனா். ஆனால் பிரதீபா கதவை திறக்கவில்லை.

இதையடுத்து அவா்கள், கதவுப் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த பிரதீபாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரதீபா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச் சம்பவம் மருத்துவா்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவா்கள், பிரதீபா கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து பிரதீபா உடலில் கரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இச் சோதனையில் அவா், கரோனாவால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை செயலா் விசாரணை: இதையடுத்து பிரதீபா சடலம், பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தாா். அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் வசந்தாமணியிடம் விசாரணை மேற்கொண்டாா்.

இதற்கிடையே, பிரதீபா சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தில் எந்த காயம் இல்லாததினாலும், தற்கொலை செய்து கொண்டதற்கான எவ்வித அறிகுறி இல்லாததினாலும் பிரதீபா இறப்பில் குழப்பமும், மா்மமும் நீடிக்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, பிரதீபா இறப்புக்கான காரணம் என்ன என்பதை காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com