கரோனா அச்சம்: களக்காடு-முண்டந்துறை சரணாலய வனவிலங்குகளைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு

விலங்கினங்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை சரணாலய..
களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் வரவேற்பு பதாகை
களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் வரவேற்பு பதாகை

விலங்கினங்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை சரணாலய வன விலங்குகளைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயமாக 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட புலிகள், சிறுத்தைகள், மான்கள், மிளா, கரடி, யானை, தேவாங்கு, காட்டுப்பன்றி, உள்ளிட்ட 103 வகையான விலங்கினங்கள், 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 448 வகையான அரியவகை தாவரயினங்கள் உள்ளன. தமிழகத்தில் அதிக அளவில் ஈரப்பதமிக்க பசுமை மாறா காடுகள் கொண்ட சரணாலயமாக இது திகழ்கிறது. அதனால் விலங்கினங்கள் மட்டுமன்றி தாவர பல்லுயிர் பெருக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. சுமார் 400}க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் இந்தச் சரணாலயத்தில் வசிக்கின்றன.

சுற்றுலா தடையால் அமைதி: இந்தச் சரணாலயத்தில் தாமிரவருணியின் 13 கிளை நதிகள் உள்ளன. இவற்றில் நன்னீர் மீன் இனங்கள் பூச்சியினங்கள் அதிகம் உள்ளன. இக்காப்பகத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாணதீர்த்தம், சேர்வலாறு, காரையாறு, சொரிமுத்தைய்யனார் கோயில் ஆகியவற்றிற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

தென்தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நன்னீர் வளம் மிகுந்த சுற்றுலாத் தலமாக இக்காப்பகம் உள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சரணாலயத்திற்கு வந்து செல்கிறார்கள். ஆனால், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் சரணாலயமும் மூடப்பட்டது. இதனால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக வனப்பகுதி மிகவும் அமைதியான சூழலுக்கு மாறியுள்ளது.

களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளை ஆய்வு சென்ற குழுவினர் பார்த்த அரியவகை தவளை
களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளை ஆய்வு சென்ற குழுவினர் பார்த்த அரியவகை தவளை

இதனால் லோயர் டேம், காணிக்குடியிருப்பு, மயிலாறு, சேர்வலாறு, மாஞ்சோலை, தலையணை, நம்பி கோயில் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. மான்கள், முயல்கள் உள்ளிட்டவை கூட சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அதேநேரத்தில் வனவிலங்குகளுக்கும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பல்வேறு நாடுகளின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள சரணாலயங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  

கரோனாவுக்காக சிறப்புக் குழு:

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வட்டாரங்கள் கூறியது:

மேற்குத்தொடர்ச்சி மலை உயிரினங்களின் சொர்க்கபுரியாக உள்ளது. தமிழக வனப்பகுதிகளில் தவளை, முதலை போன்ற நிலம் மற்றும் நீரில் வாழும் 36 வகையான உயிரினங்கள், 24 வகையான பாலூட்டி இனங்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.  களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் மான், மிளா, யானை, குரங்குகள் மிகவும் அதிகமாக உள்ளன. வெளிநாடுகளில் வெüவால், சிங்கம் உள்ளிட்டவற்றுக்கு  கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் வனவிலங்குகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, களக்காடு}முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிகளில் வசிக்கும் விலங்கினங்களுக்கு கரோனா பரவியுள்ளதா என்பதைக் கண்காணிக்க 30 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 கால்நடை மருத்துவர்கள், 3 வனவர்கள், 14 வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றனர்.

ஆரோக்கியமாக வனவிலங்குகள்:

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய உயரதிகாரி ஒருவர் கூறியது: அமெரிக்காவில் கரோனா தொற்றினால் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. அதன்பின்பு இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின்படி இந்தச் சரணாலயத்தில் அமைக்கப்பட்ட குழுவினர் 3 நாள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதிகை மலையின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி தமிழக கேரள வன எல்லையான கன்னிக்கட்டி பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

விலங்கினங்களின் எச்சங்கள், விலங்கினங்களின் அன்றாட நடவடிக்கைகள், எதிரிகளை வீழ்த்தும் முறைகள், நீர் பருகும் முறை, கால்தடங்கள் உள்பட பல்வேறு விஷயங்களைக் கண்காணித்துக் குறிப்பெடுத்துள்ளனர். பொதுவாக விலங்கினங்களுக்கு ஏதேனும் புதுவித நோய்கள் உருவானால் அதன் எச்சத்தில் மாற்றங்கள் தென்படுவது வழக்கம். அதேபோல ஒரு கூட்டமாக வசிக்கும் விலங்கினங்களில் நோய்த்தாக்கப்படும் விலங்கினத்தின் அன்றாட செயலில் மாற்றம் தென்படும். ஆனால், இந்த ஆய்வின்போது அவ்வாறு எந்த மாற்றமும் இல்லை. மேலும், புலி மற்றும் யானை உள்ளிட்டவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதைக் காண முடிந்துள்ளது. இதுதவிர கோடைக் காலத்திலும் வனவிலங்குகளுக்குத் தேவையான நீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.

அபூர்வ விலங்கினங்கள்: களக்காடு}முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யச் சென்ற குழுவினர் பல்வேறு அபூர்வ வகையான விலங்கினங்களைப் பார்த்துள்ளனர். மெலனோ பாட்ராச்சஸ் இன்டிகஸ் வகையைச் சேர்ந்த கருமைநிற தவளை கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய வாய் கொண்ட இந்தத் தவளையினம் மிகவும் தொன்மை சிறப்பு மிகுந்தது. ஈரப்பதம் கொண்ட இலைச்சறுகுகள், பாறை இடுக்குகளில் மறைந்து வாழும் தன்மை கொண்டது. இந்தத் தவளையினத்தை குழுவினர் பார்த்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதேபோல கஸ்தூரி மான் வகைகள், அரியவகை கரடியினங்களும் வசிப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com