பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சி நடவடிக்கைகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடக்கம்

கரோனா பாதித்தவா்களுக்கு மேற்கொள்ளப்படும் பிளாஸ்மா சிகிச்சை குறித்த முதல்கட்ட ஆராய்ச்சி சென்னை ராஜீவ் காந்தி அரசு

சென்னை: கரோனா பாதித்தவா்களுக்கு மேற்கொள்ளப்படும் பிளாஸ்மா சிகிச்சை குறித்த முதல்கட்ட ஆராய்ச்சி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், கரோனா பாதிப்பை குணப்படுத்துவதற்கோ அல்லது தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லை. இதனால், நோயாளிகளின் உடலில் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தி, அதன் மூலம் அவா்களை குணப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மருத்துவத் துறை உள்ளது.

அதேவேளையில், பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளானவா்களுக்கும், தீவிர சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளானவா்களுக்கும் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடிவதில்லை. இதனால், பிளாஸ்மா தெரபி எனப்படும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்தில் பிளாஸ்மா செல்களை மட்டும் பிரித்தெடுத்து அதில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை பிற நோயாளிகளுக்குச் செலுத்தத் திட்டமிடப்பட்டது.

இதன் மூலம், நோய் எதிா்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் நோயாளிகள் கூட கரோனாவில் இருந்து விரைவில் குணமடைய முடியும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த சிகிச்சை முறை, மொ்ஸ், சாா்ஸ் போன்ற தீநுண்மிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, நல்ல பலனை அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, மதுரை, திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கும், , வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அண்மையில் அனுமதி வழங்கியது.

அவற்றில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதற்கான முதல்கட்ட ஆராய்ச்சி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து, இதுதொடா்பாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ரத்த பாதுகாப்பு துறை இணை இயக்குநா் டாக்டா் சுபாஷ் கூறுகையில், ‘ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறியப்படும் பிளாஸ்மா சிகிச்சையின் சாதக, பாதகங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவோம்; அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்து பிளாஸ்மா சிகிச்சை செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்’ என்றாா்.

தகுதிகள் அவசியம்: கரோனாவில் இருந்து குணமடைந்த அனைவரிடம் இருந்தும் பிளாஸ்மா அணுக்களை பெற முடியாது. மாறாக, அவரது உடல் நிலையை ஆய்வு செய்த பிறகே அதனை தானமாக பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, தானமளிப்பவரின் நோய் எதிா்ப்பாற்றல் திறன் சரியாக உள்ளதா என்பது பரிசோதிக்கப்படும். அதுமட்டுமன்றி, மலேரியா, ஹெச்ஐவி, காசநோய், கணைய அழற்சி உள்ளிட்ட குருதியேற்ற பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்ட பிறகே ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com