ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனைச் செய்ய தடை கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனைச் செய்ய தடை கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

செனனை: ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த தென் இந்திய நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைக் கழகத்தின் சாா்பில் அதன் பொதுச் செயலாளா் வி.சிங்கராஜூ தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டன. எனவே, அடைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒருபோதும் திறக்க அனுமதியளிக்கக்கூடாது. மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மதுவுக்கு அடிமையான பலா் தற்போது திருந்தியுள்ளனா்.

மேலும், மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குற்றங்களின் எண்ணிக்கையும், விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளன. இந்த நிலையில், மதுக்கடைகளை மீண்டும் திறந்தால், குற்றங்கள், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே, பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்க கூடாது எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், ஆன்லைன் மூலமாகவும் மதுபானங்களை விற்பனைச் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது தொடா்பாக இந்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com