ஈரோடு மாவட்டத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது தனிமைப்பகுதி கட்டுப்பாடுகள்

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கட்டுப்பாடுகள் போன்றவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது தனிமைப்பகுதி கட்டுப்பாடுகள்

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கட்டுப்பாடுகள் போன்றவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 16 ஆம் தேதி இரவு தாய்லாந்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவருக்கு மார்ச் 21 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகள் முதன்முதலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஒரு முதியவர் மட்டும் இறந்தார், மற்ற 69 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனிடையே ஈரோடு ரயில்வே காலணி, மரப்பாலம், கவுந்தப்பாடி, கோபி நகராட்சி, லக்கம்பட்டி என பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி ஏற்படுத்தப்பட்டது. 33,330 குடும்பத்தைச் சேர்ந்த 1.67 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இறுதியாக ஏப்ரல் 15ஆம் தேதி 6 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு கடந்த 28 நாள்களாக புதிய தொற்று ஏற்படவில்லை. தனிமைப்பகுதி துவங்கிய நாள் முதல் 28 ஆவது நாள் வரை அப்பகுதியில் புதிய தொற்று ஏற்படாவிட்டால் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

இதன்படி கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஏப்ரல் 18 தேதியும், ரயில்வே காலனி பகுதி கடந்த 24ஆம் தேதியும் மரப்பாலம் பகுதி 25ஆம் தேதியும், கவுந்தப்பாடி பகுதி 27ஆம் தேதியும், கோபி நகராட்சி மற்றும் லக்கம்பட்டி பகுதியில் 27ஆம் தேதியும், சத்தியமங்கலம் நகராட்சி, கொடுமுடி வட்டம் சென்னசமுத்திரம், கெம்மநாயக்கன்புதூர் பகுதிகள் 30ஆம் தேதி தனிமைப்பகுதியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

ஈரோடு மீராமெய்தீன் வீதி, மோசிக்கீரனார் வீதி, சாஸ்திரி நகர், கருங்கல்பாளையம், கள்ளுக்கடைமேடு பகுதியில் கடந்த 5ஆம் தேதியும். பி.பெ.அக்ரஹாரத்தில் 6ஆம் தேதியும்,  நம்பியூர் வட்டம் அழகாபுரிநகர் பேரூராட்சியில் 10 ஆம் தேதியும் கட்டுப்பாடு நிறைவடைந்தது.

இறுதியாக சத்தியமங்கலம் வட்டம் கே.என்.பாளையம் பேரூராட்சியிலும், பெருந்துறை வட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியிலும் இன்று கட்டுப்பாடுகள் நிறைவடைகிறது.  

கட்டுப்பாடு நிறைவுப் பகுதியில் காலை 5 மணி முதல் 11 மணி வரை வெளியே சென்று வரவும், அப்பகுதியில் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்படுவர். ஓரிரு நாள்களில் தடுப்புகள் அகற்றப்பட்டு, காவல்துறை காவல் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாறும்.

சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து வந்த நபர்களுக்கு இனி தொற்று உறுதியானால் சென்னையைப் போல எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தெரு, குறிப்பிட்ட கட்டடம், தனி வீடு என அடையாளப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மற்றவர்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம்.

இதனால் இன்று முதல் மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாமல் மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com