உலக செவிலியர் நாள்: செவிலியர்கள் வாழ்வில் ஒளி பிறக்குமா?

உலக செவிலியர்கள் தினம் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை
உலக செவிலியர் நாள்: செவிலியர்கள் வாழ்வில் ஒளி பிறக்குமா?

உலக செவிலியர்கள் தினம் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பணி நிரந்தரம் கோரி 10000 செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து அமைதிப் போராட்டம் நடத்துகின்றனர். 

செவிலியர் சேவை

உலக சுகாதார நிறுவனம், உலகெங்கும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்க 2020ஆம் ஆண்டை செவிலியர்களுக்கான ஆண்டாக அறிவித்தது. மருத்துவத்துறையின் முதுகெலும்பெனப் போற்றப்படும் செவிலியர்களுக்கு, தமிழகத்தில் உரிய அங்கீகாரமோ, பணிப் பாதுகாப்போ, செய்யும் பணிக்கேற்ற ஊதியமோ கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கின்றனர். தற்போது அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்காமல், அரசு ஒப்பந்த முறையிலேயே பணியமர்த்தி வேலை வாங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்வதாகப் பணி ஆணை வழங்கிய தமிழக அரசு, ஐந்து ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. செவிலியர்கள் உயிரோடு இருக்கும்போதே தற்போது உரிய ஊதியம் கிடைக்கவில்லை. தப்பித்தவறி அவர்கள் இறக்க நேரிட்டாலும், போதிய இழப்பீடு கிடையாது. இதனையும் மீறி எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் இன்முகத்துடன் சேவைகளைப் புரிந்து வருகின்றனர். தற்போது உள்ள அசாதாரண கரோனா சூழ்நிலையிலும் கூட எவ்வித பணி பாதுகாப்போ, உயிர் பாதுகாப்போ இல்லாத நிலையிலும் துணிந்து இன்முகத்துடன் நோயாளிகளிடம் நெருங்கி  தங்களது சேவையைச் செய்து  வருகின்றனர். கரோனா மட்டுமின்றி காசநோய், எய்ட்ஸ் போன்ற தொற்று நோய் கொண்ட நோயாளிகளுக்கும் தொடர்ந்து இன்முகத்துடன் சேவை செய்து வருகின்றனர்.

இன்முகத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை செய்யும் செவிலியர்
இன்முகத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை செய்யும் செவிலியர்

செவிலியர் பரிதாப நிலை

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் 2015 ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு எழுதி சுமார் 11000 செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளில் 1949 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ள எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு ஒப்பந்த ஊதியம் ரூபாய் 7700 மட்டுமே கடந்த ஆண்டு வரை வழங்கிவந்த அரசு, நீதிமன்ற வழக்கு, மிகப்பெரியப் போராட்டம் ஆகியவற்றிற்குப் பின்னர்  2019ஆம் ஆண்டு முதல்  ரூபாய் 15,000 வழங்கி பணி நிரந்தரம் செய்யாமல் அரசு, செவிலியர்கள் உழைப்பைச் சுரண்டி வருகிறது. ஒரே பணியினைச் செய்யும் நிரந்தரமாக்கப்பட்ட செவிலியர்கள் ரூபாய் 50,000 அனைத்துப் பலன்களுடன் மாத ஊதியம் பெறும் போது, நிரந்தரமாக்கப்படாத செவிலியர்கள் ரூபாய் 15,000 மட்டுமே பெற்றுக் கொண்டு அதே பணியினைச் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா சிகிச்சைக்கு முழு உடல் பாதுகாப்புக் கவசத்துடன் தயார் நிலையில் செவிலியர்கள்
கரோனா சிகிச்சைக்கு முழு உடல் பாதுகாப்புக் கவசத்துடன் தயார் நிலையில் செவிலியர்கள்

கோரிக்கைப் போராட்டம்

2020 ஆம் ஆண்டை உலக சுகாதார நிறுவனம், உலக செவிலியர் ஆண்டு என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. செவிலியர்கள் தினமான மே 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒரு நாள் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே, காலமுறை ஊதியம் மற்றும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக அமைதிப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையிலும் கரோனா நோயாளிகளுக்கு இன்முகத்துடன் சேவை செய்துவரும் செவிலியர்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டுமென செவிலியர்கள் விரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com