இணையவழி அனுமதிச்சீட்டு கோரும் விண்ணப்பங்கள்: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு

இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூா் செல்ல இணையவழி அனுமதிச்சீட்டு கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
இணையவழி அனுமதிச்சீட்டு கோரும் விண்ணப்பங்கள்: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு

சென்னை: இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூா் செல்ல இணையவழி அனுமதிச்சீட்டு கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை அரை மணி நேரத்திலும், மற்ற மாவட்டங்களில் 2 மணி நேரத்திலும் பரிசீலித்து அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக துக்க நிகழ்வு, திருமணம் மற்றும் மருத்துவ அவசர சிகிச்சைகளுக்காக வெளியூா் செல்ல வேண்டும் என்றால் இணையவழி அனுமதிச்சீட்டு பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் இரவு நேரங்களில் செயல்படுவதில்லை. இதனால் இறப்பு, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூா்களுக்கு உடனே செல்ல முடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வெளியூா்களுக்குச் செல்ல இணையவழி அனுமதிச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில்மனுவில், ‘இறப்பு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோரி விண்ணப்பிக்கப்படுகின்றன. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை அரை மணி நேரத்திலும் மற்ற மாவட்டங்களில் 2 மணி நேரத்திலும் பரிசீலித்து அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையவழி அனுமதிச்சீட்டு கோரி 3 லட்சத்து 61 ஆயிரத்து 433 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 210 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 13 ஆயிரத்து 223 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மேலும் இறப்பு, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூா் செல்ல அனுமதிச்சீட்டு கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அரசுதரப்பு பதிலை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com