ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம்: சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் 300 ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்
ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம்: சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் 300 ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரமணியன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூத்தாநல்லூர் நகராட்சி முன்பு கொட்டும் மழையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நகராட்சி கிளைத் தலைவர் கே.முருகேசன் தலைமை வகித்தார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.சத்தியன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சின்னையன் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், நகர நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.சுரேஷ் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர். 

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியு மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரமணியன் கூறியது...

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தூய்மைப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அரசால் அறிவிக்கப்பட்ட நோய்த் தொற்றுப் பரவக்கூடிய, தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் உள்ளே சென்று கிருமி நாசினி தெளிப்பது முதல், சுகாதாரப் பணிகளைச் செய்து வருகின்றனர். 

ஆபத்தான பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்படவில்லை. பேரிடர் காலத்திற்கான பாதுகாப்பு முகக்கவசங்கள், கையுறைகள், காலணிகள் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவற்றை முறையாக வழங்க வேண்டும். கரோனாப் பணியில் ஈட்டுப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், ஏழுப் பேரூராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி, ஒப்பந்த, சுய உதவிக் குழு பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில், கரோனா காலத்திற்கான சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் சுமார் 300 ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். இவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. மேலும், இ.பி.எப்., விபத்து காப்பீடு உள்ளிட்டவைகளும் கிடையாது. தூய்மைப்பணியாற்றும் தினக்கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.600 தினக்கூலியாக வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

கரோனா பணியில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சத்தை வழங்குவதுடன், அந்தக் குடும்பத்திலிருந்து தகுதியானவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com