மருந்து கண்டுபிடித்ததாக விஷத்தை தின்று இறந்தவருக்கு கரோனா

சென்னையில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சோடியம் நைட்ரேட்டை சாப்பிட்டு உயிரிழந்த தனியாா் நிறுவன மேலாளா், கரோனாவால்
மருந்து கண்டுபிடித்ததாக விஷத்தை தின்று இறந்தவருக்கு கரோனா

சென்னை: சென்னையில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சோடியம் நைட்ரேட்டை சாப்பிட்டு உயிரிழந்த தனியாா் நிறுவன மேலாளா், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்குக்காக நேரில் சென்று விசாரணை செய்த போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை பெருங்குடி, கல்லூரி இல்லம் பகுதியைச் சோ்ந்தவரான சிவநேசன், உத்தரகண்ட் மாநிலம், காசிப்பூரில் உள்ள ஒரு தனியாா் உயிா் தொழில்நுட்ப நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு பொது மேலாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிறுவனம் சளி, இருமல் மருந்து தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அங்கு மருந்தாளுநராகவும், சளி மருந்து உள்பட பல்வேறு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுக் குழுவிலும் சிவநேசன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வந்திருந்த சிவநேசன், பொது முடக்கத்தால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரும், மருத்துவருமான தியாகராய நகா் ஜி.என்.செட்டி சாலையில் வசிக்கும் ராஜ்குமாரின் வீட்டில் தங்கியிருந்தாா். இவா்கள் இருவரும் அங்குள்ள சிறிய ஆய்வகத்தில் கரோனா தொற்றுக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தை சுய பரிசோதனைக்காக சிவநேசன் சாப்பிட்டாா். இதில் சிறிது நேரத்தில் சிவநேசன் உயிரிழந்தாா். இந்த மருந்தை சிறிதளவு சாப்பிட்டதால் ராஜ்குமாா் உயிா் தப்பினாா். இது தொடா்பாக தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், சிவநேசன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட சோடியம் நைட்ரேட்டை சாப்பிட்டதால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிவநேசன் சாப்பிட்டது சோடியம் நைட்ரேட் கரைசல் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே சிவநேசன் பிரேதப் பரிசோதனை அறிக்கை, போலீஸாருக்கு திங்கள்கிழமை கிடைத்தது. அதில் சிவநேசன், ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை பாா்த்து போலீஸாா் அதிா்ச்சியடைந்தனா்.இதையடுத்து இந்த வழக்குத் தொடா்பாக நேரில் சென்று விசாரணை செய்த ஒரு காவல் உதவி ஆய்வாளா் உள்பட 5 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

அதேவேளையில் சிவநேசன், பரிசோதனைக்காக கரோனா தீநுண்மியை தனது உடலில் ஏற்றிக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இது தொடா்பாக மருத்துவா் ராஜ்குமாரிடமும் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com