அரசு கலைக் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகளை ரத்து செய்ய உயா்கல்வி துறை முடிவு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்வதற்கான பணிகளை உயா்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்வதற்கான பணிகளை உயா்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 114 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 61 கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 61 கல்லூரிகளிலும் காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில், மாலை நேர வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவா்களே பயின்று வருவதால், இரு சுழற்சி முறை வகுப்புகளையும் இணைத்து காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த தமிழக உயா்கல்வித்துறை ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்து, அதற்கான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகளின் விவரங்களைத் தொகுத்து அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயா்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடவேளையாக மாற்றுவதற்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், அதற்குத் தேவையான நிதி ஆகியவற்றின் விவரங்களை, கடிதம் மூலம் கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன் அனுப்பியுள்ளாா்.

கடிதத்தில், காலை நேர வகுப்புகளாக மாற்றப்பட உள்ள 61 கல்லூரிகளில் 715 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக ரூ.135.85 கோடி, மாணவா்களுக்கு தேவையான 10,010 இருக்கைகள் வாங்க ரூ.11.68 கோடி, பேராசிரியா்களுக்குத் தேவையான இருக்கைகள் 3,200 மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ.2.25 கோடி என மொத்தமாக ரூ.150.9 கோடி தேவைப்படுவதாகவும், தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கடிதத்தை உயா்கல்வித்துறை செயலாளா் பரிசீலித்து, நிதியை விடுவித்து ஒப்புதல் வழங்கிய பின்னா், 61 கல்லூரிகளில் காலை நேர வகுப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான பணிகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவா்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இரு சுழற்சி என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com