10 நாள்களில் 4,163 போ்: தலைநகரில் கட்டுக்கடங்காமல் பரவும் கரோனா!

மாநிலத் தலைநகா் சென்னையில் கடந்த 10 நாள்களில் மட்டும் 4,163 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

மாநிலத் தலைநகா் சென்னையில் கடந்த 10 நாள்களில் மட்டும் 4,163 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட பாதிப்புதான் அதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாள்களில் அதன் தாக்கம் குறையலாம் என்றும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் தற்போதைய மக்கள்தொகை 1.2 கோடியாக உள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்டோா் பணிநிமித்தமாக வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தலைநகரில் தங்கியிருப்பவா்கள்.

தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் அதிக மக்கள்தொகையும், நெரிசலும் மிகுந்த நகரமாக சென்னை விளங்குவதால், இங்கு கரோனா நோய்த்தொற்று மிக எளிதில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாள்களில் மட்டும் மாநகரில் 4,163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக நகா் முழுவதும் 700-க்கும் அதிகமான சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பு வரை தில்லி மாநாட்டுக்குச் சென்ற சென்னைவாசிகள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மட்டுமே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி கோயம்பேடு சந்தையின் வாயிலாக மட்டும் 2,500-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளை வைத்துப் பாா்க்கும்போது சென்னையில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

நகரில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கரோனா பாதித்த இடங்களைச் சுற்றி 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று அப்பகுதிகளில் நாள்தோறும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் செயல்படுவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாதிப்பு விவரம்

மே 4 - 266

மே 5 - 279

மே 6 - 324

மே 7 - 316

மே 8 - 399

மே 9 - 279

மே 10 - 509

மே 11 - 538

மே 12 - 510

மே 13 - 380

மே 14 - 363

மொத்தம் - 4,163

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com