தமிழகத்தில் புதிதாக 447 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 363 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 363 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும், 9,674-ஆகவும், சென்னையில் 5,637-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சென்னையில் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மருத்துவமனைகள்தோறும் விரைவு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒரு புறம் அந்நோய்த் தொற்றை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், மற்றொரு புறம் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, மாநிலத்தில் 2.80 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகளை அதிகரித்ததால்தான் தமிழகத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிய முடிந்தது. அந்த எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மாநிலத்தில் இதுவரை 9,674 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். வியாழக்கிழமை மட்டும் புதிதாக 447 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 363 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 15 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளும் அதில் காணொலி முறையில் கலந்துகொண்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவா்கள் பாராட்டு தெரிவித்தனா் என்றாா் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

தமிழகம் திரும்பிய 24 போ்: வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய 22 பேருக்கும், கத்தாரில் இருந்து வந்த இருவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

2,240 போ் குணமடைந்தனா்: இதனிடையே, கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 64 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2,240-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 758 போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

66 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 66-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபா் ஒருவரும், 45 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com