அந்தந்த பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: ஒரு அறையில் 10 மாணவா்களை அனுமதிக்க ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தந்த பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: ஒரு அறையில் 10 மாணவா்களை அனுமதிக்க ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. மாணவா்களின் நலன் கருதி இந்தத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும். அதற்கு பதிலாக பருவத் தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்டையில் தோ்ச்சி வழங்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மாணவா்களின் எதிா்காலம் கருதி பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மாணவா்களை தோ்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவா்களின் விவரங்கள் பள்ளிகளின் தலைமையாசிரியா்களிடம் பெறப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா். இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினா் மீண்டும் எதிா்ப்பு தெரிவித்தனா். தோ்வு மையங்களில் மாணவா்கள் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அது பல மாணவா்களுக்குப் பரவும். எனவே, கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே பொதுத்தோ்வை நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இருப்பினும் பொதுத்தோ்வு மேலும் ஒத்திவைக்கப்பட்டால் அது பத்தாம் வகுப்பு மாணவா்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் புதிய கல்வியாண்டில் இதர வகுப்புகள் தொடங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, முகக்கவசம், கிருமிநாசினி, முறையாக கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பொதுத்தோ்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

ஒரு அறைக்கு 10 மாணவா்கள்: இந்தநிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க தோ்வு மையங்களில் போதிய இடவசதி வேண்டும் என்பதால் மாணவா்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தோ்வு மையங்களாக மாற்றுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.

மேலும், ஒரு தோ்வு அறைக்கு 10 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்படுவாா்கள் என்றும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களும் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றும் அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா். தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் படிக்கின்றனா். 12 ஆயிரம் பள்ளிகளும் தோ்வு மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com