அரசிடம் நிவாரணம் வழங்கக் கோரி ஆடிப்பாடி, கச்சேரி நடத்திய நட்டுப்புறக் கலைஞர்கள்

பொது முடக்கத்தால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள், வாழப்பாடியில்
அரசிடம் நிவாரணம் வழங்கக் கோரி ஆடிப்பாடி, கச்சேரி நடத்திய நட்டுப்புறக் கலைஞர்கள்


பொது முடக்கத்தால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள், வாழப்பாடியில் ஒன்றிணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் ஆடிப்பாடி கச்சேரி நடத்தி, நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியால், கையடக்கக்கருவியான செல்லிடப்பேசிக்குள்ளேயே அனைத்தும் அடங்கி விட்டது. சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகள், உலகில் பல்வேறு பகுதி நிகழ்வுகளையும், இருக்கும் இடத்தில் இருந்தே சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பாமர மக்களும் கண்டுகளித்துக் கொள்கின்றனர்.

இதனால், உடலை வருத்தி கலைஞர்கள் நிகழ்த்தும் நாட்டுப்புறக் கலைகளுக்கு, கிராமப்புற மக்களிடையேயும் வரவேற்பு குறைந்து வருகிறது.
ஆனால், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களில், மக்கள் குல தெய்வமாக கருதி வழிபடும் காவல் தெய்வங்களின் கோவில் திருவிழாக்களில், இன்றளவும் கரகம், குறவன்–குறத்தி, தப்பு, பம்பை, நாதஸ்சுவரம், உறுமி, உடுக்கை, கும்மி, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை அரங்கேற்றம் செய்வதை தொடர்ந்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, திருமணம், காதணிவிழா, மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களிலும் மேள வாத்தியங்களோடு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், சேலம் மாவட்டத்தில் ஏறக்குறைய 2,000  நாட்டுப்புறக் கலைஞர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து கோவில் திருவிழாக்களும், திருமணம், காதணி விழா, மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், கடந்த மூன்று மாதங்களாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கம் தளர்த்திக் கொள்ளப்பட்டாலும் இன்னும் ஒரு சில மாதங்கள் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், பொதுமக்கள் அதிகளவில் கூடும் கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை கிராம கலைகளோடு நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே, நாட்டுப்புற கலைஞர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.  இவர்களது கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒன்றிணைந்த நாட்டுப்புற கலைஞர்கள், ஆட்டமாடிப் பாட்டுப்பாடி நாட்டுப்புறக் கலைகளை அரங்கேற்றி தங்களது கோரிக்கையை எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து நாட்டுப்புற கலைஞர்கள் பொன்னாரம்பட்டி பெரியசாமி, மன்னாயக்கன்பட்டி ஐயனார், தனபால், வாழப்பாடி சின்னப்பையன், ராமராஜ் ஆகியோர் கூறியதாவது:

பொது  முடக்கத்தால் ஒட்டுமொத்த நாட்டுப்புறக் கலைஞர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் அத்தியாவசியப்பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாட்டுப்புறக் கலைகள் ஒன்றிணைந்து ஆடிப்பாடி எங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று நிவாரணமும், அத்தியாவசியப்பொருட்களும் வழங்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com