ஜூன் மாதம் பொதுப்போக்குவரத்து தொடங்க வாய்ப்பு?

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஜூன் மாதம் பொதுப்போக்குவரத்து தொடங்க வாய்ப்பு?

சென்னை: தனியார் போக்குவரத்து செயலிகளில், வரும் ஜூன் 7 -ஆம் தேதி முதல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசுப் பணியாளர்களுக்கு மட்டும், அலுவலகம் செல்ல மாவட்டத்துக்குள் குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது, மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் போக்குவரத்து சார்ந்த விஷயங்களில், அந்தந்த  மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதன்படி, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து எப்போது முதல் இயக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தனியார் போக்குவரத்து செயலிகளில், வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சிலர் முன்பதிவும் செய்துள்ளனர்.

அந்த செயலிகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு: 
அரசுப் பேருந்துகளும் அடக்கம்: ஜூன் 7-ஆம் தேதி, சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை செல்ல, சுமார் 85 பேருந்துகள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதில் 45 பேருந்துகள் அரசுப் பேருந்துகள். ஆனால், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியவில்லை. அதே நேரம், பேருந்து இயக்கம் குறித்து அறிவிப்புகள் எதுவும், அரசு போக்குவரத்து  இணையதளங்களிலோ, அதற்கான செயலிகளிலோ இடம்பெறவில்லை. கட்டணத்தைப் பொருத்தவரை, சாதாரண நாள்களில் பெறப்படும் கட்டணமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஓரிரு நாள்களில் அறிவிப்பு:
இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அரசு இதுவரை முடிவு செய்யவில்லை. ஓரிரு நாள்களுக்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. எங்களுக்கு இதுதொடர்பாக உத்தரவு வரவில்லை எனத் தெரிவித்தனர். 
 இதுகுறித்து ஆம்னி பேருந்து நிர்வாகிகள் கூறியதாவது: தனியார் போக்குவரத்து செயலியில், முன்பதிவு குறித்த  விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அரசு முறையான அறிவிப்பு வெளியிட்ட பிறகே, பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் 
என்றனர். 

"செயலிகளில் முக்கிய அறிவிப்பு'
ஆம்னி பேருந்தின் நிறுவன இணையதளங்களில், முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் போக்குவரத்து செயலிகளைப் பொருத்தவரை, பேருந்துகள் இயக்கம் தொடர்பான அரசு வழிகாட்டுதல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. பொதுமுடக்கத்தை நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டால், அதற்கேற்ப பேருந்துகள் இயக்குவதில் தாமதம் ஏற்படும். அந்த சமயத்தில், முன்பதிவுத் தொகை முழுவதுமாக பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதே, செயலிகளின் முக்கிய அறிவிப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com