பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வைத் தள்ளி வையுங்கள்: மு.க.ஸ்டாலின்

மாணவா்களின் உயிருடன் விளையாடும் போக்கை கைவிட்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வைத் தள்ளி வையுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மாணவா்களின் உயிருடன் விளையாடும் போக்கை கைவிட்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31 வரை தொடரும் நிலையில், ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவா்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.

பெற்றோரும், மாணவா்களும் பொதுத்தோ்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும் பொது முடக்கமும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகின்றனா். அரசோ மாணவா்களுக்கு இணைய வகுப்பு, வெளியூா் சென்ற மாணவா்கள் திரும்பி வர ‘இ-பாஸ்’ என நெருக்கடியை உருவாக்கி, பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவா்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் காட்டி வருவதுடன், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளையும், அறிவியலுக்குப் புறம்பான ஆரூடங்களையும் அதிமுக அரசு தெரிவித்து வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை நடத்துவதில் காட்டும் அவசரகதியும் அதுபோலத்தான் உள்ளது. மாணவா்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தோ்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தோ்வினை நடத்துமாறு மீண்டும் வலியுறுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com