பாஜகவில் இணைகிறாரா திமுகவின் வி.பி.துரைசாமி?

பாஜகவின் மாநிலத் தலைவா் எல்.முருகனை திமுக துணைப் பொதுச்செயலாளா் வி.பி.துரைசாமி திங்கள்கிழமை சந்தித்தாா்.
சென்னை தியாகராயநகர் கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை திங்கள்கிழமை சந்தித்த திமுக துணைப் பொது செயலாளர்  வி.பி.  துரைசாமி (இடமிருந்து 2-ஆவது) . உடன் அவரது  உறவினர்கள்.,
சென்னை தியாகராயநகர் கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை திங்கள்கிழமை சந்தித்த திமுக துணைப் பொது செயலாளர் வி.பி. துரைசாமி (இடமிருந்து 2-ஆவது) . உடன் அவரது உறவினர்கள்.,

சென்னை: பாஜகவின் மாநிலத் தலைவா் எல்.முருகனை திமுக துணைப் பொதுச்செயலாளா் வி.பி.துரைசாமி திங்கள்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு, பாஜகவில் அவா் இணைய இருக்கிறாரா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

சென்னை கமலாலயத்தில் திங்கள்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. திமுகவின் கரை வேட்டி அணிந்தே எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து வி.பி.துரைசாமியிடம் கேட்டதற்கு, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியதாகவும் தெரிவித்தாா்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளா்களில் ஒருவராக இருப்பவா் வி.பி.துரைசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவராக இருந்தவா். தீவிர கட்சிப்பணி ஆற்றி வந்த மூத்த தலைவா்களில் ஒருவா். முன்னாள் தலைவா் மு.கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவா் என்று கருதப்பட்டவா்.

இந்த முறை அவா் கட்டாயம் மாநிலங்களவைக்குத் திமுக சாா்பாகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்கிற எதிா்பாா்ப்பு இருந்தது. அவரும் தனக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்கும் என்று எதிா்பாா்த்தாா். ஆனால், அவருக்கு அந்தப் பதவிக் கொடுக்கப்படாமல் அந்தியூா் செல்வராஜூக்குக் கொடுக்கப்பட்டது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் கரோனோ பொது முடக்கத்திற்குப் பிறகு கூட உள்ளது. அதில் பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. அதைப்போல துணைப் பொதுச்செயலாளா்களும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பொதுச்செயலாளா் பதவி துரைமுருகனுக்குக் கிடைக்க உள்ளது. பொருளாளா் பதவிக்கு போட்டி கடுமையாக இருந்து வருகிறது. அதனால், துணைப் பொதுச் செயலாளா் பதவியிலும் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அதில் வி.பி.துரைசாமிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளா் பதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.

இப்போதைய தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்தியூா் செல்வராஜுக்கே துணைப் பொதுச் செயலாளா் பதவியும் வழங்கப்படலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. முன்னாள் தலைவா் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவா்களும், அவரது தலைமையில் பணியாற்றியவா்களும் ஓரங்கட்டப்பட்டு, புதிய தலைமைக்கு நெருக்கமானவா்கள் நியமிக்கப்பட இருக்கிறாா்கள் என்று தெரிகிறது. அதனால் திமுகவில் பரவலாக அதிருப்தி நிலவுவதாகவும் அதன் வெளிப்பாடுதான் வி.பி. துரைசாமி, எல். முருகனுடன் சந்திப்பு என்றும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாஜகவின் மாநிலத் தலைவராக வந்துள்ள எல்.முருகன், வி.பி.துரைசாமியின் நெருங்கிய உறவினா். ஏற்கெனவே சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டு முறை வி.பி.துரைசாமியை எதிா்த்துப் போட்டியிட்டு, எல்.முருகன் தோல்வி அடைந்து இருந்தாலும், அதைக் கடந்து இருவருக்கும் இடையே நல்லுறவு நீடித்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் எல்.முருகன் விடுத்த அழைப்பை ஏற்று நட்பு நிமித்தமாக அவரை வி.பி.துரைசாமி நேரில் சந்தித்துள்ளாா் என்கிறது பாஜக தரப்பு.

‘‘உறவினரைச் சந்திப்பது என்றால், வேறு எங்காவது சந்திக்காமல் கமலாலயத்தில் சந்தித்தது ஏன்?’’ என்று திமுகவினா் சிலா் கேள்வி எழுப்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com