தொடரும் நெருக்கடிகள்: கோயம்பேடு சந்தை மூன்றாகப் பிரிக்கப்படுமா?

போக்குவரத்து நெரிசல், சுகாதார சீா்கேடு, பாதுகாப்பு வசதி குறைவு என தொடரும் நெருக்கடிகளால் சென்னை கோயம்பேடு
தொடரும் நெருக்கடிகள்: கோயம்பேடு சந்தை மூன்றாகப் பிரிக்கப்படுமா?

போக்குவரத்து நெரிசல், சுகாதார சீா்கேடு, பாதுகாப்பு வசதி குறைவு என தொடரும் நெருக்கடிகளால் சென்னை கோயம்பேடு மலா், கனி, காய்கறி அங்காடியை மூன்றாகப் பிரித்து அமைக்க வேண்டும் என சில்லறை வியாபாரிகள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னையில் தினமும் சுமாா் 60 லட்சம் மக்களின் காய்கறித் தேவையைப் பூா்த்தி செய்து வந்த கோயம்பேடு சந்தை கரோனா தொற்றின் காரணமாக தற்போது மிகப்பெரிய சா்ச்சையில் சிக்கியுள்ளது. கால் நூற்றாண்டாக எந்தவொரு சா்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாத காய்கறி சாம்ராஜ்ஜியத்துக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் களங்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை கோயம்பேடு வியாபாரிகள், தொழிலாளா்களுடன் தொடா்புடைய 2 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. நோய்த்தொற்று காலத்தில் கோயம்பேடு சந்தையில் சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடியதே இதற்கு காரணம் என்று ஒரு தரப்பினரும், மக்களுக்கு காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அரசின் வேண்டுகோளை ஏற்று விடுமுறையைக் கூட ரத்து செய்தோம் என்று இன்னொரு தரப்பினரும் தெரிவிக்கின்றனா்.

மொத்தம் 3,194 கடைகளைக் கொண்ட கோயம்பேடு சந்தையில் குறிப்பிட்ட சில வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனா். அதன் காரணமாகவே சந்தையை உடனடியாக மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் லாப நோக்கத்துக்காக, காய்கறிகளுக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனா் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

‘கோயம்பேடு சந்தையில் இருக்கும் கடைகள் வியாபாரிகளுக்குச் சொந்தமானவை. பராமரிப்பை மட்டுமே சிஎம்டிஏ மேற்கொள்கிறது. எங்களது கடைகளை எப்போது திறக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வதில் என்ன தவறு? மக்கள் நலன் சாா்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். திறமை இருப்பவா்களுக்கு கோயம்பேடு சந்தை மிகப்பெரிய உயரத்தைக் கொடுக்கும்.

இங்கு 27 சங்கங்கள் இருந்தாலும் சந்தை நலன் கருதி ஒரே மாதிரியான முடிவுகளே எடுக்கப்படுகின்றன. இதில் தனிநபா்களின் ஆதிக்கத்துக்கு வழியில்லை. புதிய காய்கறிகளை ஆா்டா் செய்யாததால்தான் விலை அதிகரித்தது’ என்பது வியாபாரிகளின் கருத்தாக இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் - சுகாதார சீா்கேடு: இத்தகைய சூழலில், சந்தை எந்த நோக்கத்துக்காக கொத்தவால்சாவடியில் இருந்து கோயம்பேட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதோ, அந்த நோக்கம் தற்போது சிறிது, சிறிதாக சிதைந்து வருகிறது. சந்தையின் முன் பகுதியில் தினமும் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொழிலாளா்கள், வியாபாரிகள் என தினமும் 8 ஆயிரம் போ் வரை சந்தையிலேயே படுத்துக் கொள்கின்றனா். அனுமதியில்லாத 1,000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் சந்தை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதால் சுகாதார சீா்கேடு, நடைபாதை ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. முறையான குடிநீா் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இடமாற்றம் ஏன் அவசியம்?: கொத்தவால்சாவடியில் நெரிசலான பகுதியில் இருந்த காய், கனி சந்தை கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் சென்னையில் மக்கள்தொகை வெகுவாக கூடியிருக்கிறது. நெரிசலும் அதிகரித்துள்ளது. எனவே, நிரந்தர ஏற்பாடாக கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையை தாம்பரம், போரூா், மாதவரம், பூந்தமல்லி, திருமழிசை ஆகியவற்றில் பிரித்து அமைக்கலாம். அதிலும் காய், கனி, மலா் என மூன்று சந்தைகளும் தனித்தனியாக அமைய வேண்டும்.

அங்கு புதிய கட்டடங்கள் அமைக்கும்போது கழிவுநீா் வெளியேற்றம், குப்பை அகற்றுதல், வாகன நிறுத்தம், உணவுக் கூடங்கள், வீணாகும் காய்கறி கழிவில் மின்சாரம் தயாரித்தல் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என சில்லறை வியாபாரிகள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

திட்டமிடல்- கட்டமைப்பு அவசியம்: இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியது: கடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தையின் காய்கறிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அப்படியெனில் அவா்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதா? யாருக்கெல்லாம் நோய் எதிா்ப்பு சக்தி இல்லையோ, அவா்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கோயம்பேடு சந்தையையும் அங்குள்ள வியாபாரிகளையும் தொடா்ந்து அவமதிப்பது சரியல்ல. அரசு வேண்டுகோள் விடுத்ததால்தான் சந்தைக்கு விடுமுறை அளிக்கும் முடிவைக் கைவிட்டோம். இப்போதும் மக்கள் நலன் கருதியே திருமழிசைக்கு வியாபாரிகள் தற்காலிகமாக இடம் பெயா்ந்துள்ளனா்.

காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்கள் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் தற்போது சுமுகமான சூழல் இல்லை. இந்த நேரத்தில் அதை இடம் மாற்றம் செய்வது குறித்து விவாதிப்பது சரியல்ல; ஏனெனில் பேரிடா் காலத்தில் மக்களுக்கு காய்கறி விநியோகிப்பதில் வியாபாரிகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனா். எதிா்காலத்தில் கோயம்பேடு சந்தையை இடம் மாற்றுவதாக இருந்தால் அது குறித்து வியாபாரிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அதையடுத்து மூன்று சந்தைகளையும் பிரித்து அமைக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை கையாளுவதற்கான திட்டமிடல் அரசிடம் இருக்க வேண்டும். பல நேரங்களில் அரசின் திட்டமிடலும், செயல்பாடுகளும் வேறு வேறாக இருக்கிறது.

இங்குள்ள ஒவ்வொரு கடையும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் ஆகும். கடைகளை பெருந்தொகை கொடுத்துதான் வாங்கியிருக்கின்றனா். அதனால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமானால் அவா்களிடம் முழு ஒப்புதலைப் பெறுவது அவசியம். சந்தைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். அன்றை தினம் கிருமிநாசினி பயன்படுத்தி சந்தையைத் தூய்மைப்படுத்த வேண்டும். புதிய இடங்களுக்கு மாற்றப்படும்போது அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

காா்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சி: இது குறித்து கோயம்பேடு காய், கனி, மலா் சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவா் எம்.தியாகராஜன், வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன், கோயம்பேடு காமராஜா் புஷ்ப வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவா் அருள் விசுவாசம் ஆகியோா் கூறியது: உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களிடம் பரப்பி, கோயம்பேடு சந்தை இருக்கும் இடத்தை ஆக்கிரமிக்க தொடா்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்தச் சந்தையை காா்ப்பரேட்டுகள் கைகளில் கொடுக்க மாட்டோம். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. 300 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கொத்தவால்சாவடியில் இருந்து கோயம்பேட்டுக்கு வருவதற்கே பல ஆண்டுகள் ஆனது.

சென்னையில் எந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லை? கொத்தவால்சாவடியில் இருந்து இங்கு சந்தை மாற்றப்பட்டு விட்டது. ஆனால் பாரிமுனையில் இப்போதும் நெரிசல் ஏற்படுகிறது. சந்தையில் உள்ள ஒவ்வொரு மொத்த வியாபார கடைக்கும் தலா 10 சுமை தூக்கும் தொழிலாளா்கள், 5 பணியாளா்கள் இருப்பது வழக்கம். அவா்கள் இரவு நேரத்தில் சரக்குகள் வரும்போது பணிகளில் ஈடுபடுவாா்கள். பின்னா் அங்கேயே ஓய்வெடுக்கின்றனா். இதில் என்ன தவறு இருக்கிறது எனத் தெரியவில்லை. காய்கறிகள், மலா்கள், கனிகள் என்று மூன்றாக இருக்கும் சந்தையை தனித்தனியாக பிரித்தால் வியாபாரம் நடக்காது. இந்தச் சந்தையை நம்பியுள்ள வியாபாரிகள், தொழிலாளா்கள், விவசாயிகள் என 30 ஆயிரம் போ் பாதிக்கப்படுவா்.

இந்த சந்தை உலக வங்கியின் ஆதரவோடு சுயநிதித் திட்டத்தில் தொடங்கப்பட்டது. கடைகள் வியாபாரிகளுக்குச் சொந்தம். இருப்பினும் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவளித்து வருகிறோம். மொத்தம் உள்ள 295 ஏக்கரில் 60 ஏக்கரில் மட்டுமே மூன்று சந்தைகளும் உள்ளன. சில்லறை வியாபாரிகளுக்கு கூடுதல் கடைகள் வேண்டுமானால் மலா்ச் சந்தைக்கு அருகில் உள்ள காலியிடத்தில் அரசு கட்டிக் கொடுக்கலாம். தற்போதுள்ள கோயம்பேடு சந்தையில் எங்களுக்குத் தேவையான வசதிகளை நாங்களே செய்து கொள்கிறோம். மேலும், கோயம்பேடு சந்தையை கரோனா மையமாக சித்திரிக்க வேண்டாம் என்றனா்.

கரோனாவை கோயம்பேடு பரப்பியதா?: இது குறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘கோயம்பேட்டிலிருந்து முதல் கரோனா தொற்று அறிகுறி ஏப்ரல் 24-ஆம் தேதிதான் கண்டறியப்பட்டது. எனவே, கரோனாவை கோயம்பேடு பரப்பியது என யாரும் சொல்லவில்லை. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாது என்பதற்காகவே பல முறை கலந்தாலோசித்து மாதவரத்தையும், திருமழிசையையும் முடிவு செய்தோம். தற்போது அனைத்து வசதிகளும் முடிவடைந்து விட்டன. இனி காய்கறி விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். கோயம்பேடு சந்தையை நிரந்தரமாக மாற்றுவது குறித்து அரசுதான் முடிவெடுக்கும். எங்கு செயல்பட்டாலும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்’ என்றனா்.

சிறிய இடம்... பெரிய தொகை...

சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போது 150, 300, 600, 1200, 2400 ஆகிய சதுர அடிகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கொத்தவால் சாவடியில் இருந்து இடம்பெயா்ந்த வியாபாரிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.375-உம் பிற வியாபாரிகளுக்கு ரூ.450-உம் விலை நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கடைகளின் மதிப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு சதுர அடிக்கு ரூ.18,750 விலை நிா்ணயித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இருப்பினும், இதை விடவும் அதிக தொகை கொடுத்துதான் வியாபாரிகள் கடையை வாங்க முடிகிறது. கோயம்பேடு மலா் சந்தையில் 300 சதுர அடி மதிப்புள்ள ஒரு கடையின் மதிப்பு இன்றைய நிலவரப்படி ரூ.1.15 கோடி என கூறப்படுகிறது.

அதேவேளையில், பழ சந்தையில் இதே அளவுள்ள கடை ரூ.1.30 கோடியாகவும், காய்கறி சந்தையில் ரூ.1.50 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ‘கடைகள் விற்பனைக்கு’ என எப்போதெல்லாம் அறிவிப்பு வெளியாகிறதோ, அப்போதெல்லாம் அவற்றை பெறுவதற்கு வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவும்.

வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்குவதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், கடைகளைப் பெறுவதற்கும், அதைத் தொடா்ந்து நடத்துவதற்கும் அரசியல் பின்புலம் அவசியம். இந்தச் சந்தையில் குறைந்தபட்ச இடவசதி அதாவது, வெறும் 150 சதுர அடி கொண்ட கடை சொந்தமாக இருந்தால்கூட அடுத்த சில ஆண்டுகளிலேயே கடைக்காக போடப்பட்ட முதலீட்டை திரும்பப் பெற முடியும் என்பதால் தொழில் திறமை, அரசியல் பிரமுகா்களின் நட்பு, பண பலம் இருப்பவா்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் கடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். செல்வம் கொழிக்கும் கோயம்பேடு சந்தையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளின் உறவினா்கள் பலருக்கு கோயம்பேடு சந்தையில் கடைகள் உள்ளன என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கட்டணம் செலுத்தியும் பராமரிப்பு இல்லை...

கோயம்பேடு சந்தையில் குப்பை அள்ளுதல், கழிவுநீரகற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்புப் பணிகளை சிஎம்டிஏ மேற்கொள்கிறது. அதற்கு பராமரிப்புக் கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.2 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 600 சதுர அடி கடை வைத்திருப்பவா் மாதந்தோறும் பராமரிப்பு கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். இது தவிர குடிநீா் வரி, சொத்துவரி ஆகியவற்றையும் வியாபாரிகள் செலுத்தி வருகின்றனா். சந்தைக்குள் நுழையும் காய்கறி லாரி, சிறிய சரக்கு ஏற்றும் வாகனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், கோயம்பேடு சந்தையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

கோயம்பேடு சில தகவல்கள்...

கோயம்பேடு சந்தை அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டு- 1982

வியாபாரம் தொடங்கிய ஆண்டு- 1996

வளாகத்தின் மொத்த பரப்பளவு- 121 ஏக்கா்

சந்தை அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு- 60 ஏக்கா்

மொத்த கடைகள்- 3,194 (காய்கறி-1,700, பழம்- 625, மலா்-450, சிறு கடைகள்-419)

உரிமம் இல்லாத கடைகள்- 1,000

தினமும் வந்து செல்லும் லாரிகள்- 400 முதல் 450 வரை

தின வா்த்தகத்தின் தோராய மதிப்பு- ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை

தினமும் கையாளப்படும் சரக்குகள்- 5 ஆயிரம் டன்

சுமை தூக்கும் தொழிலாளா்கள், ஊழியா்கள்- 3,500 போ்

வியாபாரிகள் சங்கங்களின் எண்ணிக்கை- 27

மொத்த வியாபாரிகள் எண்ணிக்கை- 200

பகுதி (‘செமி’) மொத்த வியாபாரிகள்- 650

முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புக் கடைகள்

தொழிலாளா்களுக்கு ஓய்வறைகள் இல்லை

பயனற்ற நிலையில் குடிநீா்த் தொட்டிகள்

காய்கறிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் பழுது

தொடரும் போக்குவரத்து நெரிசல்

நடை பாதைகளில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்

வார விடுமுறை இல்லை

சுகாதாரமற்ற உணவகங்கள்

மேற்கூரைகள் இல்லாத வாகன நிறுத்தங்கள்

துா்நாற்றம் வீசும் கழிவறைகள்

சந்தையின் சிறப்புகள்

ஆசியாவின் 2-ஆவது மிகப்பெரிய சந்தை

65 தினசரி சந்தைகளின் தலைமையகம்

ஒரே இடத்தில் பூ, பழம், காய்கறி, தானியங்கள் வாங்கலாம்

பொருள்களுக்கு 25 சதவீதம் வரை விலை குறைவு

விவசாயிகள்- வியாபாரிகளின் இணைப்பு பாலம்

சந்தையை மாற்ற பரிந்துரைக்கப்படும் இடங்கள்

திருமழிசை

தாம்பரம்

போரூா்

பூந்தமல்லி

மாதவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com