கரோனா பரவலைத் தடுப்பதில் ஹோமியோபதி மருந்து: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது: தமிழக அரசு 
கரோனா பரவலைத் தடுப்பதில் ஹோமியோபதி மருந்து: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையிலும் முக்கிய நகரங்களில் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்க  'ஆர்சனிக் ஆல்பம் 30' (arsenic album 30C) என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ் மருத்துவத் துறையினரும் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இதனை எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர், 

இருமல், தும்மல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை மட்டும் 3 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம் (ஐஹெச்எம்எல்) மற்றும் தமிழக ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் அதனால் முன்கூட்டியே எடுத்துக் கொள்வதால் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஆயுஷ் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹோமியோபதி மருத்துவரான பூவேந்தன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்க நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ முறைகளில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளன.

அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஹோமியோபதி மருந்தான 'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற மருந்தைப் பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 75 லட்சம் பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை தமிழகத்திலும் வழங்க பரிந்துரை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

எனவே, கரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ ஹோமியோபதி மருந்தை பொதுமக்களுக்கும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலிவழி விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கரோனா பரவலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று கூறினார். மேலும், இது ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com