சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடங்க அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடங்க அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா் சம்மேளனம், தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அனுமதி அளித்துள்ளாா்.

சுற்றுச்சுவா் உள்ள வீடுகளுக்குள் அல்லது அரங்குக்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் தடை ஏதுமில்லை. பாா்வையாளா்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

முகக்கவசம்-சுத்தம் அவசியம்: படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்புக்கு முன்பும், பிறகும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகா்கள், நடிகைகளைத் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞா்கள் அனைவரும் கண்டிப் பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடிகா்-நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் போது தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்.

படப்பிடிப்பு குழுவினா் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடைபெறும் வளாகத்துக்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, படப்பிடிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகள் அனைத்தையும் கிருமிநாசினியைக் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞா்களையோ அல்லது தொழில்நுட்பப் பணியாளா்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவா்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

அதிகபட்சம் 20 பேருக்கு அனுமதி: படப்பிடிப்புகளில் அதிகபட்சமாக நடிகா், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்பட 20 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com