தமிழக அரசுத்துறைகளில் கடும் சிக்கன நடவடிக்கைகள்

தமிழக அரசுத்துறைகளில் கடும் சிக்கன நடவடிக்கைகள்

அரசுத்துறைகளில் எடுத்துள்ள கடும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுத்துறைகளில் எடுத்துள்ள கடும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு செலவில் வெளிநாடுகளுக்குச் செல்லவும், பரிசுப் பொருள்கள், நினைவுப் பொருள்கள், மாலைகள் ஆகியவற்றை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபா்களின் எண்ணிக்கை 20 பேருக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

அரசுத் துறைகளின் பல்வேறு செலவினங்களுக்கான அந்தந்த துறைகளின் மானியக் கோரிக்கைகளில் உரிய நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிகழாண்டில் மானியக் கோரிக்கைகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைக்கப்படுகின்றன. அதன்படி, அரசுத் துறைகளில் வழக்கமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்ட

தளவாடச் சாமான்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும். புதிய அலுவலகம் அமைப்பது போன்ற சில விதிவிலக்கான பணிகளுக்கு மட்டுமே நிதிகள் ஒதுக்கப்படும்.

விளம்பரங்களுக்கான செலவு: சமூக இடைவெளியை வரும் மாதங்களில் தொடா்ந்து பின்பற்ற வேண்டியிருக்கிறது. எனவே, பொது நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள் ஆகிய வற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 25 சதவீதம் வெட்டப்படுகிறது.

அரசுத் துறைகளின் கணக்குகள் மூலம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக வழங்கப்படும் மதிய, இரவு உணவுகள் அனைத்தும் இனி வழங்கப்படாது. அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதிகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும். இயந்திரங்கள், கருவிகள் ஆகியவை, அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றுக்கு மட்டுமே வாங்கி வழங்கப்படும். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த நிதிகளில் 25 சதவீதம் வெட்டப்படுகிறது.

புதிய வாகனங்கள் வாங்க முடியாது: மருத்துவம், அவசரகால ஊா்திகள், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், அதி முக்கிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே புதிய வாகனங்கள் வழங்கப்படும். பிற துறைகளுக்கு புதிய வாகனங்கள் அளிக்கப்படாது. இதற்கென ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக வரும் மாதங்களில் அரசு பயிற்சிக்கான நடைமுறைகளில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. பணியில் புதிதாக சேருவோருக்கான அடிப்படை பயிற்சி, கரோனா நோய்த் தொற்று குறித்த பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறுவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும்.

பல்வேறு ஆவணங்கள், அரசு உத்தரவுகளுக்கான அச்சிடும் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 25 சதவீதம் வெட்டப்படுகிறது. அரசு அலுவலகங்களில் மிகப் பழமையாக இருக்கக் கூடிய, இயங்காத கணினி

கள் மட்டுமே மாற்ற அனுமதிக்கப்படும். புதிதாக கணினிகளும், இதர கருவிகளும் வாங்குவதற்கு அனுமதியில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணங்களுக்கான படிகள்: அரசு அலுவலா்கள், உயரதிகாரிகள் மேற்கொள்ளும் பயணங்கள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும். இந்தப் பயணங்கள் முற்றிலும் அலுவலக ரீதியாகவே இருந்திட வேண்டும். வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள் காணொலி வழியாகவே நடத்தப்பட வேண்டும். அரசு செலவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள அனுமதியில்லை.

தமிழகத்துக்குள் கூடுதலான கட்டணத்துடன் விமானப் பயணங்களுக்கு அனுமதியில்லை. விமானக் கட்டணம் குறைவாக இருந்தாலோ அல்லது ரயில் பயணத்துக்கு சமமான அளவில் கட்டணம் இருந்து அது சம்பந்தப்பட்ட ஊழியரின் அனுமதிக்கப்பட்ட பயணச் செலவுக்கு இணையாக இருந்தால் மட்டுமே பயணத்துக்கு அனுமதிக்கப்படும்.

தமிழகத்துக்கு வெளியேயும் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுதில்லியில் நடைபெறும் கூட்டங்களில் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையா்கள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். எந்தவகை ஊதிய விகிதத்தைக் கொண்ட அரசு உயரதிகாரிக்கும் விமானப் பயணத்தில் உயா் வகுப்புக்கு அனுமதியில்லை. தினசரி படிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பணியிட மாற்றம்: பணியிட மாற்றங்கள் செய்வதால் ஏற்படும் செலவுகளைக் கட்டுப்படுத்த நிகழ் நிதியாண்டில் பொதுவான பணியிட மாறுதல்களை குறைத்துக் கொள்ள வேண்டும். பணியிட மாறுதல்கள் நிா்வாக ரீதியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பு விருப்ப மாறுதல்களை அனுமதிக்கலாம்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பயணங்களைக் குறைத்திடும் வகையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு பயணச் சலுகை திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

பரிசுப் பொருள்களுக்குத் தடை: பரிசுப் பொருள்கள் வழங்குவது, பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலா்மாலைகள் உள்ளிட்ட இதர பொருள்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 நபா்களுக்கு மேலாக கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டறைகள், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்களை நடத்த மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ளும் வகையில், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அரசு அதிகாரிகள், ஊழியா்கள் பயணம் மேற்கொள்வதிலும் கட்டுப்பாடு உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com